நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்...
சென்னை: துப்பாக்கியால் சுட்டு ரௌடியைப் பிடித்த போலீஸ் - யார் இந்த ஐகோர்ட் மகாராஜா?
சென்னை வேளச்சேரி தரமணி இணைப்பு சாலையில் கடந்த 14-ம் தேதி வேளச்சேரி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த வினோத் (27), சென்னை மணலியைச் சேர்ந்த பாலமுருகன் (23), சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகிய மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை ஓனரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் வேளச்சேரி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான வினோத்துக்கு தூத்துக்குடியில் கொலை வழக்கும் பாலமுருகளுக்கு ஆள் கடத்தல் உள்பட 4 வழக்குகளும் சுரேஷிக்கு 3 குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த ரௌடி ஐகோர்ட் மகாராஜா எனத் தெரியவந்தது. அதனால் அவரைக் கைது செய்ய இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் மகாராஜாவைத் தேடிவந்த நிலையில் அவர், நெல்லையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்ற தனிப்படை போலீஸார், ரௌடி மகாராஜாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது மகாராஜாவிடம் விசாரித்தபோது கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய டூவிலர், துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்று (21.3.2025) அதிகாலையில் மகாராஜாவை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் அங்குச் சென்றனர். சம்பவ இடத்துக்குச் சென்றபோது திடீரென டூவிலரில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த மகாராஜா, `நான் ஏற்கெனவே போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவன், என்னையே பிடிக்கப் பார்க்கிறீர்களா' என போலீஸாரை மிரட்டியிருக்கிறார். அப்போது துணிச்சலாக ஐகோர்ட் மகாராஜாவை போலீஸார் பிடிக்க முயன்ற போலீஸாரை அவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கியிருக்கிறார். அப்போது துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. அதனால் கீழே கிடந்த கற்களை எடுத்து போலீஸாரை நேக்கி வீசத் தொடங்கியிருக்கிறார் மகாராஜா. போலீஸார் விலகியதையடுத்து காவல் வாகனத்தில் கற்கள் விழுந்து கண்ணாடி உடைந்திருக்கிறது.
சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த தனிப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மகாராஜவை சரண் அடையும்படி எச்சரித்திருக்கிறார். ஆனால், அவர் தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய துப்பாக்கியால் மகாராஜாவின் வலது காலில் சுட்டார். அதில் சுருண்டு விழுந்த மகாராஜாவை, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். ஆதம்பாக்கம் நகைக்கடை அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றது தொடர்பாக மகாராஜாவிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

யார் இந்த ஐகோர்ட் மகாராஜா என தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம்.
``தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மகாராஜா மீது கொலை வழக்கு உள்ளது. இதுதவிர கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மகாராஜா மீது நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு மதுரை எஸ்.எஸ்.காலனி மைதிலி ராஜலட்சுமி என்பவரின் மகனை கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் கடத்தி 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்கள். இந்த வழக்கிலும் ஐகோர்ட் மகாராஜாவுக்கும் குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சூர்யா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் சூர்யாவுக்காகவே ஐகோர்ட் மகாராஜாவின் டீம் மைதிலி ராஜலட்சுமியின் மகனைக் கடத்திய தகவலும் வெளியானது. இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சூர்யா தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவாக இருந்த ஐகோர்ட் மகாராஜாவை போலீஸார் கைது செய்தனர். .
சிறையிலிருந்து வெளியில் வந்த மகாராஜாவுக்கு பண நெருக்கடி அதிகளவில் இருந்தது. அதனால், ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை ஓனரை கடத்தி பணம் பறிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அதற்குள் மகாராஜாவின் கூட்டாளிகள் வாகனச் சோதனையில் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். தற்போது மகாராஜாவையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறோம். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, பீகாரில் வாங்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
