Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.
மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (மார்ச் 19) திடீரென லேசான உடல்நலக்குறைவு ஏற்பட, எமரால்டு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று (மார்ச் 20) கிளம்பியிருக்கிறார்.
செல்போனை காணவில்லை
அந்த வழியாகச் சென்ற தனியார் வாகனம் ஒன்றில் லிஃப்ட் கேட்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அந்த வாகனத்திலிருந்த செல்போனை காணவில்லை எனவும், அதனை குமார் திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்த ஓட்டுநர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த குமாரைக் காவல்துறையினர் எமரால்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடித்து வீட்டிற்குச் சென்ற குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதைக் கண்டு பதறிய குடும்பத்தினர் உடனடியாகக் குமாரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
வீடியோவில் மரண வாக்குமூலம்
அங்குச் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று (மார்ச் 21) உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலும் மிரட்டியதாலுமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வீடியோவில் மரண வாக்குமூலமாகத் தெரிவித்திருக்கிறார் குமார்.
இறப்புக்குச் சரியான நியாயம்
பின்னணி குறித்துத் தெரிவித்த குமாரின் உறவினர்கள் , "செல்போன் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகத்தின் பெயரில் குமாரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் ஸ்டேஷனிற்குள் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், கடும் மன உளைச்சலைத் தந்ததுடன் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிரட்டியும் உள்ளனர். இதனால் மனமுடைந்த குமார் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், இதை மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் தற்போது காவல்துறையினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். குமாரின் இறப்புக்குச் சரியான நியாயம் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை
இது குறித்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், "குமார் தற்கொலை குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.
சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை என்கிற பெயரில் அத்துமீறலில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks