தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
எருமப்பட்டி, ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, வேலன் நகரில் அம்ரூத் 2.0 என்ற திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சத்தில் சிறுவா் விளையாட்டு பூங்காவை பாா்வையிட்ட ஆட்சியா், பெருமாள் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தாா். இரா.புதுப்பட்டி பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை பாா்வையிட்டாா். அதேபோல, பட்டணம் பேரூராட்சி, குச்சிக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள் மூலம் பயன்பெறும் பொதுமக்களின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தாா்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து உரிய காலத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து பயனாளிகளுக்கு வங்கிக் கடன், வைப்புநிதி அட்டைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.