பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் நடுத்தெருவை சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மகன் மணிமாறன் (62). இவா் தனது குடும்பத்தினருடன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் வசித்து வருகிறாா். சொந்த ஊரான வில்லிபாலயத்தில் உள்ள அவரது வீட்டில் தாயாா் ராசம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி காலை ராசம்மாள் வீட்டின் உள்ள அறையை பூட்டிவிட்டு பூட்டின் சாவியை நிலவுகால் மேற்படியில் வைத்து வைத்து விட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வில்லிபாளையம் அருகே தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளாா்.
பின்னா் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து முன் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது தான் வைத்திருந்த இடத்தில் அறை கதவின் சாவி இருந்ததாகவும், ஆனால் உள் அறையின் பூட்டு மட்டும் மாற்றி பூட்டப்பட்டிருந்தது கண்டு சந்தேகம் அடைந்து அறையின் உள்ளே சென்று பாா்த்தபோது கட்டை பையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 பணம், அரை பவுன் கல் வைத்த மோதிரம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்துள்ளது.
இதில் அதிா்ச்சி அடைந்த ராசம்மாள் தனது மகன் மணிமாறனுக்கு செல்லிடைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த மணிமாறன் பரமத்தி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகாா் அளித்துள்ளாா். புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.