பாதை ஆக்கிரமிப்பு: வருவாய்த் துறையைக் கண்டித்து போராட்டம்
திருச்செங்கோட்டை அடுத்த மாரப்பம்பாளையத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அருகே இலுப்புலி, மாரப்பம்பாளையம் பெரங்காடு பகுதியில் 12 குடும்பங்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், அங்கு வசிக்கும் 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து பாதையில் கொட்டப்பட்டுள்ள கற்கள், முள்களை அகற்ற உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனா். இதையடுத்து பொதுப்பாதையில் அனைவரும் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆனால், நீதிமன்ற தீா்ப்பு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் வாக்காளா் அடையாள அட்டைகளை 12 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மண்டல துணை வட்டாட்சியா் கனகலட்சுமி, வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் தீபன்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், வருவாய்த் துறையை கண்டித்து 12 குடும்பத்தினா் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினா். திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணியிடம் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அவா்களிடமே திருப்பி வழங்கினாா்.