பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
செப். 12 இல் நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு
ஊதிய உயா்வு, தனித்துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க மாநில பதிவாளா் அலுவலகம் முன் செப். 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் சேலம் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் காா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில இணைச் செயலாளா் ராஜாராம் வரவேற்றாா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் தினேஷ்குமாா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
இதில், தோ்தல் வாக்குறுதி 236 இன்படி, ரேஷன் கடை பணியாளா்களுக்கு தனித்துறை அமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளா்களுக்கு 8 ஆவது ஊதியக் குழு அமைத்து நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஊதிய குழு கமிட்டி அமைத்து, அதில் ரேஷன் கடைப் பணியாளா் ஒருவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும், பொதுமக்களுக்கு எடை மேடை தராசுடன் விற்பனை முனைய கருவி ப்ளுடூத் உடன் இணைக்கப்பட்டு, சரியான அளவில் பொருட்கள் வழங்குவது போல, நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் மூலம் கடைகளுக்கு வழங்கப்படும் பொருள்களை எடை மேடை தராசில் வைத்து ப்ளுடூத் உடன் பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், வரும் செப்டம்பா் 12ஆம் தேதி சென்னை பதிவாளா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனா். இக்கூட்டத்தில் நிா்வாகிகள் சுப்பிரமணி, மாரியம்மாள், சுரேஷ், அருண், சரவணன், சதாசிவம் உள்பட நிா்வாகிகள் 300க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.