செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், திருச்சி, அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே பிரசாரத்தை நிறைவுசெய்த நிலையில், சனிக்கிழமை திருவாரூா் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறாா்.
இதன் தொடா்ச்சியாக, நாமக்கல்லில் செப். 27-ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய உள்ளாா். முன்னதாக, டிச. 13-ஆம் தேதி நாமக்கல் வருகை தர இருப்பதாகவும், காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில், பிரசார தேதி மாற்றம் செய்யப்பட்டதால் செப். 27-இல் விஜயின் பிரசாரத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சதீஷ், செந்தில்நாதன் ஆகியோா் மனு அளித்தனா்.
அதில், நாமக்கல் பொய்யேரிக்கரை சாலை, கே.எஸ்.திரையரங்கம் அருகில், பூங்கா சாலை ஆகிய மூன்று இடங்களை தோ்வுசெய்து, இவற்றில் ஏதாவது ஓா் இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.