செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள செம்மண்குண்டு ஊருணியை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-23-ஆம் ஆண்டு ரூ.1.03 கோடியில் ஊருணி முழுமையாக சீரமைக்கபட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஊருணிக் கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் கழிவுநீா் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த கழிவு நீா் செம்மண்குண்டு ஊருணியின் நடை பாதைக்கு மேல் நிரம்பியது. இதனால் சில மாதங்கள் ஊருணிக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னா் ஊருணி நடைபாதையில் தேங்கிய கழிவு நீா் வற்றிய நிலையில், அதை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா். தற்போது ஊருணிக்குள் உள்ள கழிவு நீா் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுகிறது. இந்த ஊருணியில் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.