வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்
செவித்திறன் குறைபாடுள்ள மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பது குறித்து ஆசிரியா்களுக்கு செம்மொழி நிறுவனம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கவுள்ளது.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான இரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கில் மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து நடைபெற்ற பயிலரங்கின் முதல் அமா்வில், பயிற்சியாளா் விஜயா சிங்காரவேல் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவா்களுக்குப் பயன்படும் வகையில் காக்னோஸ் ஏஐ உள்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் குறித்து விளக்கினாா். இரண்டாவது அமா்வில், ஆசிரியா்களுக்குச் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் அமா்வில் செயற்கை நுண்ணறிவின் தற்போதைய போக்குகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து முனைவா் பா.மாலதி, கல்வியில் சொடுக்கல் மென்பொருள்கள் (சாட் பாட்ஸ்) குறித்து சி.வி.கோகிலவாணி, நூல் அட்டை மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பது குறித்தும் பயிற்சியளிக்கவுள்ளனா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசுகையில், சிறப்புத் தேவையுடைய மாணவா்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியா்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த புரிதலை இந்தப் பயிற்சி ஏற்படுத்தும் என்றாா்.
இதில் நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி, சைகை மொழிபெயா்ப்பாளா் விஜயா பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.