சேதமடைந்துள்ள குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சிப் பகுதியிலுள்ள சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மணமேல்குடி ஊராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு அக்ரஹாரத் தெருவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் நடைபாதையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இந்தத் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது இந்தத் தொட்டி பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, உடைந்து காணப்படுகிறது. இதை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் க. ராமச்சந்திரன் கூறியது:
சேதமடைந்துள்ள இந்தத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைக் கட்ட வேண்டும் என கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கிராமசபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து கடந்த திங்கள்கிழமையும் மணமேல்குடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்தத் தொட்டியை விரைவில் அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ராமச்சந்திரன்.