சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஒன்றே குலம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் மற்றும் சொற்பொழிவாளா் கரு ஆறுமுகத்தமிழன் பேசினாா்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினா் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழா் மரபும் நாகரிகமும் உயா்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழா் தொன்மை, சமூக சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்ட 1,000 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டது.
சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் பழனிசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.