அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை!
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!
சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை விற்பதற்காகவே ஒரு நெட்வொர்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர காவல் துறை ஒருபக்கம் தனிப்படை அமைத்து போதை நெட்வொர்க்கினை கண்காணித்து வருகின்றனர். மற்றொருபக்கம் என்னதான் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும் அதனையும் தாண்டி இந்த கும்பல் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அதே குற்றத்தை தான் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசும் மாநகர காவல்துறை உயர் அதிகாரி சிலர், “போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பவர்கள் அனைவரும் சேலம் மாநகர எல்லைக்குள் தான் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களில் ஒரு சிலர் மீது தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்படி கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களும் வெளியே வந்து அதே வேலையை மீண்டும் செய்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 6 மாதங்களுக்கு முன் சேலம் மாநகர செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லையில் பிடிப்பட்ட 3 இளைஞர்கள் மூலம் ஒரு பெரிய நெட்வொர்க் பிடிப்பட்டது. அதே நெட்வொர்க் மீண்டும் வெளியே வந்து போதைக்காக மாத்திரை, ஊசிகளை விற்று வருகின்றனர். இந்த கும்பல் சிக்கும்போது ஏகப்பட்ட மருந்துக்கடை வியாபாரிகள், மருந்து விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனம் பேன்றவை அடுத்தடுத்து சிக்கியும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் போதை கும்பல் வேறொரு நெட்வொர்க் அமைத்து விற்பனை செய்துவருவதாக தகவல் வந்துள்ளது. அதன்மூலம் தான் கடந்த சில தினங்களுக்கு முன் வீராணம் காவல் நிலைய எல்லையில் போதை பொருள்கள் பயன்படுத்திவந்த நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்” என்றனர்.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, “பெரும்பாலும் போதை மாத்திரை என்று கூறப்படக்கூடிய வலி நிவாரணி மாத்திரகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் மருந்தகங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தான் நாளுக்குநாள் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளது. சேலம் மாநகர பகுதிக்குள் இத்தனை சம்பவங்கள் நடந்தும் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை பாய்ந்துள்ளதா என்று பார்த்தால் எதுவும் இல்லை. சட்டப்படி மருந்தகங்கள் ஆரம்பிக்க அனுமதி கொடுக்கும், மருந்துக்கட்டுப்பாட்டுதுறை சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அதனை மூடவும் செய்ய வேண்டும். ஆனால் அதனை யாரும் செய்வதில்லை. இதனால் மருந்தகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மாத்திரைகளை தற்போது ஆன்லைன் மூலமாகவும் வாங்கி இளைஞர்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபுவிடம் பேசியபோது, “போதைபொருள்கள் பயன்படுத்தும் கும்பலை கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதில், முக்கிய தலைகளை விரைவில் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மருந்தகங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதன்மூலமும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்” என்றார்.