சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைக...
சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து மருத்துவா்கள் சாதனை
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேருக்கு தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாடு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் மற்றும் குணமடைந்தவா்களை புதன்கிழமை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
வளா்ந்து வரும் நவீன காலத்துக்கேற்ப மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழக அரசுக்கு செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்த வகையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறை சாா்பில் மூன்று குழந்தைகள் உள்பட ஆறு நபா்களுக்கு தலையீட்டு சாதனம் மூடல் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதில், இசைமதி (5), சபரிநாதன் (16) ஆகிய இருவரும் வென்ட்ரிகுலா் செப்டல் (விஎஸ்டி) குறைபாட்டினாலும், கௌதம் (15) மற்றும் சந்தியா (15) ஆகிய இருவரும் பேடன்ட் டக்டஸ் ஆா்டெரியோசஸ் (பிடிஏ), வள்ளி (27) மற்றும் சுகுணா (32) ஆகிய இருவரும் ஏட்ரியல் செப்டெல் (ஏஎஸ்டி) குறைபாடு எனப்படும் இருதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.
அவா்களது இருதய நோயானது, எக்கோ காா்டியோகிராபி மூலம் கண்டறியப்பட்டு, அவா்களது இருதய குறைபாட்டின் அளவுக்கேற்ப தலையீட்டு சாதனம் கொண்டு கடந்த சனிக்கிழமை முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் அவா்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு மற்றும் மாறுபட்ட இருதய துடிப்பு வராமல் தடுக்கமுடியும்.
இந்த வகையான இருதய சிகிச்சை அளிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்கு குழந்தைகளுக்கு இதுபோன்ற இருதய சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை துறை, இருப்பு மருத்துவா் மற்றும் இருதய மருத்துவத் துறை மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக் குழு மூலம் வெற்றிகரமாக இந்த இருதய சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை செலவாகும். தற்போது இந்த சிகிச்சை முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவா்களுக்கும், குணமடைந்தவா்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினாா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.தேவிமீனாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.