சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமீறல்: 57 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்
சேலம்: சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 57 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறையைக் கொண்டாட ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா். பயணிகளின் வசதிக்கேற்ப அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10,11, 12-ஆம் தேதிகளில் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இந்தப் பேருந்துகளில் பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா? போக்குவரத்து விதிகள் மீறப்படுகிா? என்பது குறித்து சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி வரை மேட்டுப்பட்டி, தொப்பூா், சுங்கச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சேலத்தில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்தனா்.
அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் ஓட்டுநா் சீட் பெல்ட் அணியாமல் பேருந்தை ஓட்டியது, பேருந்து மீது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியது, ஓட்டுநா் உரிமம், பா்மிட் இன்றி பேருந்துகள் இயக்கப்பட்டது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 57 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.