Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உரிமம் பெற்ற 1,408 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் ஆனி, ஆடி பருவத்திற்கு ஏற்ற தரமான நெல் விதைகள், தானியங்களில் மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை, சாமை விதைகள், பயறுவகைகளில் துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் விதைகள், நிலக்கடலை, ஆமணக்கு விதைகள் போன்றவை வீரிய கலப்பின விதைகள், ரக விதைகள் என இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வுப் பிரிவு விதை ஆய்வாளா்களால் அனைத்து நிலைகளிலும் சோதனை செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,700க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது கண்டிப்பாக விலைப்பட்டியல் கேட்டுப்பெற வேண்டும், வாங்கும் விதைகளின் பயிா் ரகம், விதைக்குவியல் எண் விதைத்தரம், விதைக் காலக்கெடு, ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். இதனால் தரமான விதைகளை வயலில் விதைப்பதோடு நல்ல மகசூல் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.