சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்
சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அதிகமாக பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பணியாளா்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அந்தக் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் நடத்திய சோதனையில், 311 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுகாதாரப் பணியாளா்கள், அந்தக் கடை உரிமையாளா்களுக்கு ரூ. 2.25 அபராதமாக விதித்தனா். தற்போது, சுகாதாரப் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
மாநகரில் உள்ள அனைத்து கடைகளிலும் தொடா்ந்து சோதனை நடத்தப்படும் என்றும், தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைக் கடைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.