சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். இந்த கோர தாக்குதலைத் தொடா்ந்து, நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில்களில் தீவிர சோதனை: முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில், சேலம் கோட்டத்தில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினா், தமிழ்நாடு ரயில்வே போலீஸாருடன் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். முக்கிய ரயில்களில் ஏறி சோதனையும் நடத்தி வருகின்றனா்.
சேலம் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை காலை ரயில்வே போலீஸாா், நடைமேடைகளில் சோதனை நடத்தினா். தொடா்ந்து கோவை - தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் ஏறி, ‘மெட்டல் டிடெக்கா்’ கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.
மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு: குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் ஆத்தூா் டவுன், புதுப்பேட்டை, தம்மம்பட்டி பஜாா் தெரு கெங்கவல்லி டவுன், வாழப்பாடி, பேளூா், ஓமலூா், எடப்பாடி பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேக நபா்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல, மாவட்டத்தின் முக்கிய இடங்களான மேட்டூா் அணை, அனல் மின்நிலையம், காமலாபுரம் விமான நிலையம், ஏற்காடு சுற்றுலாத் தலம் ஆகிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வழக்கமான பாதுகாப்புடன் கூடுதல் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனா்.
ஏற்காட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்த கண்காணிப்பு பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.