சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாடு, கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து, தனிப்படைகளை அமைத்து ரயில்களில் சோதனையிட்டு வருகின்றனா்.
அந்த வகையில், சேலம் உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், சனிக்கிழமை இரவு திப்ரூகா்-கன்னியாகுமரி விரைவு ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஜோலாா்பேட்டையில் இருந்து வந்த அந்த ரயிலில் ஏறிய தனிப்படை போலீஸாா், சேலம் வரை ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனையிட்டனா். இதில், முன்பக்கத்தில் உள்ள முன்பதிவில்லா பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்குமூட்டை கிடந்தது.
அதனை போலீஸாா் திறந்துபாா்த்தபோது, 14 பிளாஸ்டிக் பண்டல்களில் 28 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்திய நபா்கள், கழிவறை அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 28 கிலோ கஞ்சாவையும் சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்து, கஞ்சாவைக் கடத்திவந்த மா்மநபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.