செய்திகள் :

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

post image

பைன் மரக் காடுகளுக்கு நடுவிலான பெரும் புல்வெளி. திடீரென மரங்களுக்குப் பின்னிருந்து சீருடையணிந்த அடையாளந் தெரியாத சிலர் துப்பாக்கியேந்தியபடி வெளியே வருகின்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கிச் சுடுகின்றனர். துளியளவும் எதிர்ப்பு இல்லை. ஏறத்தாழ அரை மணி நேரம் சுட்டு முடித்தபின் தப்பிச் சென்றுவிடுகின்றனர் – 26 பேர் பலி, அனைவரும் ஒன்றுமறியா மக்கள்.

காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று பஹல்காம். அமைதி திரும்பியதாக நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலா வந்திருக்கின்றனர். ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர், சர்வசாதாரணமாக வந்து, 26 பேரைக்  கொன்றுவிட்டுத் தப்பியும் சென்றுவிட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது; மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர், எல்லாம் வழக்கம் போல நடைபெறுகின்றன, முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் வசனங்களைச் சொல்லி மத்திய அமைச்சர்கள் மாறிமாறிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனரே.

இந்த வசனப் பொழிவுகளையெல்லாம் முழுமையாக நம்பிதானே இந்தியா முழுவதுமிருந்து இவ்வளவு பேர் ஜம்மு – காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். உலகில் மிக அதிகளவில் ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் – ஏறத்தாழ 3.50 லட்சம் பேர் – ஜம்மு - காஷ்மீரில் அவர்கள் வந்தார்கள், சுட்டார்கள், கொன்றார்கள், சென்றார்கள் என்றால்...

பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது, அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்திருக்கின்றனர். கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டபோது, திருப்பித் தாக்கவோ அல்லது குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தவோ ஒரே ஒரு காவலர் அல்லது ஒரே ஒரு ராணுவ வீரர்கூட அங்கே இல்லை. படுகொலை நடந்து இத்தனை நாள்களுக்குப் பிறகும்கூட, இத்தனை பேர் திரளக் கூடிய சுற்றுலா தலம் ஏன் முற்றிலும் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், மருந்துக்குக்கூட ஒரு வீரர் இல்லாமல், ‘சுத்தமாக’ இருந்தது? என்ற கோடி ரூபாய்க் கேள்விக்கு மட்டும் இன்னமும் ஒருவர்கூட பதில் சொல்லவில்லை! (தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல்கூறச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சென்ற கார் அணியில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 66!).

ராணுவம், துணை நிலைப் படையினர், காவல்துறை ஆகியோரின் கூட்டுப் பொறுப்பில்தான் ஜம்மு – காஷ்மீர் இருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு ஆளுநர்தான் முழுப் பொறுப்பும். ஆனால், கூடவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய அரசு ஒன்றும் பெயரளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறது (சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா அழைக்கப்படவேயில்லை என்றால் நிலைமையைப் பார்த்துக்கொள்ளலாம்!).

இந்த பஹல்காம் இருக்கும் இடம் ஏதோ பாகிஸ்தான் எல்லையையொட்டி அல்ல; நினைத்ததும் சட்டென வந்து சுட்டுவிட்டுப் போவதற்கு. ஜம்மு – காஷ்மீரின் மையப் பகுதியில் – பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் - இருக்கிறது. சுட்டவர்கள் ஒருவேளை – எந்தத் தடையுமின்றி - தப்பிச் சென்றுவிட்டதாகவே வைத்துக்கொண்டாலும்கூட வெளியேறுவதற்குச் சில மணி நேரங்களாகியிருக்கும். பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுவதைப் போலவே பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் இவ்வளவு தொலைவு புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கும்பட்சத்தில் ஜம்மு – காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையும் உளவுத் துறைச் செயல்பாடுகளும் மிகுந்த வியப்பும் அதேவேளை கவலையும் அளிப்பதாகத் தோன்றுகிறது. உளவு அமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் என்னதான் செய்துகொண்டிருந்தன?

இந்தப் பெருந்துயரத்தின் தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய சீரியஸான பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பதிலாக ஏதோ நகைச்சுவை போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் இருப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அங்கே இருப்பதாகவும் இப்போது திடீரென உளவுத் துறை வட்டாரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், இந்தத் தாக்குதலுக்கு முன்னர் வரை இவற்றைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு எதுவுமே தெரியாதா? என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

இந்த பஹல்காமிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது புல்வாமா. ஆறாண்டுகளுக்கு முன் சாலைவழி சென்றுகொண்டிருந்த படையணி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40 ராணுவத்தினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் இருந்தபோதிலும் 78 ராணுவ வாகனங்களைக் கொண்ட அணியை அந்த நெடுஞ்சாலையில் அனுமதித்தனர். இந்த முடிவுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, 2020 ஆகஸ்டில் 19 பேருக்கு எதிராகத் தேசிய புலனாய்வு முகமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 7 பேர் கைது செய்யப்பட்டனர், 6 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் இன்னமும் தலைமறைவாக இருக்கின்றனர். விசாரணையுமில்லை, தண்டனையுமில்லை. பின்னால், இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசின் கவனக் குறைவுதான் காரணம் என்று குறிப்பிட்ட அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில்தான் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட உரி, பதான்கோட், அமர்நாத் தாக்குதல்களுக்கு எல்லாமும் என்னதான் ஃபாலோ அப்?

பஹல்காமில் சுட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால், அங்கிருக்கும்  முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும், இந்த சம்பவத்துக்குப் பிறகு  ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ, கிறிஸ்துவர்களோ, மக்களுடன்தான் இணக்கமாக, அன்பாக, மிகுந்த அரவணைப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்; உதவியிருக்கிறார்கள்.  

இந்தப் பயங்கரத்துக்கு நடுவேதான் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மிகப் பெரிய மனிதநேய உணர்வு மேலெழுந்திருக்கிறது; எத்தனையோ பிரிவினைவாதத் தூண்டுதல்களுக்கு இடையிலும் சாதாரண மக்கள் மனதில் மனிதம்தான்  பெருகியோடுகிறது என்பதும் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மக்கள் நடந்துகொண்ட விதம் பற்றிப் பாதிக்கப்பட்ட, உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் கூறும் தகவல்கள் எல்லாம் உள்ளத்தை உருகச் செய்பவை.

வழக்கமாகக் குதிரை சவாரி ஏற்றிச் செல்லும் குதிரையோட்டி, குதிரையிலிருந்த பயணிகளைப் பத்திரமாக விட்டபிறகு, சுட்டவர்களைத் தடுத்துத் துப்பாக்கியைப் பறிக்க முயன்றிருக்கிறார். கோபம் கொண்ட பயங்கரவாதிகள் அவரையும் சரமாரியாகச் சுட்டுக்கொன்றுவிட்டனர் – அவர் சையத் அடில் ஹுசைன்!

மூன்று இளைஞர்கள் வந்து, பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று உச்சரித்தபடியே எங்களைக் காப்பாற்றினார்கள். பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள் என்று கூறியிருக்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த கொல்லப்பட்ட மஞ்சுநாத் ராவ் என்பவரின் மனைவி பல்லவி.

துப்பாக்கிக் குண்டுக் காயம்பட்டுக் கணவர் கிடந்தபோதிலும், ஒன்றரை மணி நேரம் வரையிலும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை; இறந்தே போய்விட்டார் அவர் என்றிருக்கிறார் ஒரு பெண்.

பிரச்சினை காஷ்மீர் பற்றியதல்ல. நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடு பற்றியதுதான். கொல்லப்பட்ட என் கணவரைத் திருப்பித் தாருங்கள். இனி எங்கள் மகனையும் மகளையும் டாக்டராகவும் என்ஜினீயராகவும் எப்படி ஆக்க முடியும்? என்று கதறுகிறார் ஒரு பெண்.

முழு நேரமும் இரவெல்லாமும்கூட உடனிருந்து பிணவறைக்கெல்லாம் வந்து, எல்லாவற்றிலும் உதவி, விமான நிலையம் வரை வந்து முசாபிர், சமீர் என்ற இரு முஸ்லிம் இளைஞர்கள்தான் அனுப்பிவைத்தனர்; எனக்கு அங்கே இரண்டு சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தந்தையை இழந்த ஒரு பெண்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து, தார்மிகப் பொறுப்பேற்று எத்தனை பேர் பதவி விலகினர்? உள்ளபடியே, புல்வாமா தாக்குதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் யார்தான் பொறுப்பு? யாருடைய கவனக் குறைவால் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன? அல்லது இவற்றுக்கெல்லாம் யார்தான் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

மூன்று அல்லது நான்கு பயங்கரவாதிகள்... அவர்கள் யாரென்றுகூட இன்னமும் உறுதியாகக் கூறிவிட முடியாது (ஏற்கெனவே கூறப்பட்ட லஸ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு மறுத்திருக்கிறது) என்ற நிலையில், இந்தப் படுகொலையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகப் பெரிய பதற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது,

போரை நோக்கிய, பதற்றத்தை நோக்கிய எதுவொன்றும், இரு நாடுகளுக்குமே நல்லதல்ல என்பதை நிதானமாக யோசிக்கும் எவரொருவராலும் சொல்லிவிட முடியும். ஆனால், சிந்து நதி நீர் உடன்பாடு நிறுத்தம் உள்பட பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது இந்திய அரசு; பதிலுக்கு சிம்லா உடன்பாடு நிறுத்தம், வான்வெளியில் பறக்கத் தடை என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

சுட்டவர்களையும் அவர்களை இயக்கியவர்களையும் விட்டுவிட்டு, இப்படியொரு தாக்குதல் நடைபெறலாம் என்பதைக்கூட அறியாதிருந்தவர்களை விட்டுவிட்டு, பாதுகாப்பு எதுவுமின்றி ஆயிரம் மக்களைப் பெருவெளியில் இலக்குகளாக நிற்க வைத்தவர்களை விட்டுவிட்டு, தொடர் நடவடிக்கைகள் என்ற பெயரில் சாதாரண மக்களைத் தவிக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தொலைத்த இடத்தில் தேடுவதற்குப் பதிலாக, மருத்துவ சிகிச்சை, உறவினர்கள், படிப்பு உள்பட எத்தனையோ அத்தியாவசியப் பிரச்சினைகளுக்காக உரிய விசா பெற்று சட்டப்படி  வந்த பாகிஸ்தானியர்களை எல்லாம்கூட உடனே வெளியேறச் சொல்வதால் என்ன பெரிய பயன் விளைந்துவிட முடியும்? அல்லலைத் தவிர.

2012 மே 25 ஆம் நாள் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை நோக்கி, நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி எழுப்பிய சரமாரியான கேள்விகளின் விடியோ கிளிப்பிங் இப்போது வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், மும்பை தாக்குதல் நடந்த இரவே செய்தியாளர்களைச் சந்தித்தார்; அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிலிருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியோ, இந்தப் பிரச்சினை தொடர்பாக தில்லியில் மறுநாள் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில்கூட பங்கேற்காமல்  பிகாரில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார், பொதுக்கூட்ட மேடையில் நின்றுகொண்டு, ‘கற்பனையிலும் நினைக்க முடியாத அளவில் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்தார். இதையே, அனைத்துக் கூட்டத்தில் பங்கேற்றுப் பின் அவர் தெரிவித்திருக்கலாமே என்றுதானே மக்கள் எதிர்பார்ப்பார்கள்?

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அரசு சில நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க முடியாதது; இயல்பானது என்றாலும்கூட தாக்குதல் எங்கே, எப்படி திட்டமிடப்பட்டது, செயல்படுத்தப்பட்டது, செய்தவர்கள் யார்? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உதவியவர்கள் யார், எவர்? என்பதை இயன்றவரை விரைவாகக் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிப்பதும் குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதும்தான் சரியான நடவடிக்கைகளாக இருக்க முடியும் – வீடுகளை இடிப்பது அல்ல.

முன்னெப்போதுமில்லாத வகையில் இரண்டு விஷயங்களைப் பயங்கரவாதிகளின்  பஹல்காம் படுகொலை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது – அரசு அமைப்புகள் எத்தனையோ பேசினாலும் அறிவித்துக் கொண்டிருந்தாலும் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளிலுள்ள குறைபாடு. இரண்டு, நாட்டில் நிலவும் எத்தனையோ  மத அடிப்படையிலான பதற்றங்களுக்கு இடையிலும் காஷ்மீரிலுள்ள முஸ்லிம்கள் நடந்துகொண்ட விதமும் கடுந்துயரத்திலும் அவற்றை நினைவுகூரும் மக்களும்.  மதங்களை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை, மனிதமே மக்களிடம் மேலோங்கியிருக்கிறது!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார... மேலும் பார்க்க

வரிவிதிப்புகள்! டிரம்ப்பின் இடிமுழக்கமும் உலகின் பெருங் கலக்கமும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்திருக்கின்றன; கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் க... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

செய்திகளில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு அனுப்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நீதி தேவதை கலக்கம்!

நீதிமன்றத் தீர்ப்புகளும் நீதிமன்றங்களும் நீதிபதிகளின் பெயர்களும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து செய்தித் தலைப்புகளில் பரபரப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.போக்சோ வழக்கொன்றில், பாதிக்கப்பட்ட சிறும... மேலும் பார்க்க