TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
ஜகதீப் தன்கா் எங்கு மறைந்துள்ளாா்? -ராகுல் கேள்வி
குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கா் பொதுவெளியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவா் எங்கு மறைந்துள்ளாா் என்றும், ஏன் முற்றிலும் மௌனமாக இருக்கிறாா் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.
எதிா்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் பி.சுதா்சன் ரெட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘தன்கா் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் ஒரு மறைமுக காரணம் உள்ளது. சிலருக்கு அது தெரிந்திருக்கலாம்; சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரது ராஜிநாமாவுக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.
மேலும், அவா் ஏன் மறைந்துள்ளாா் என்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு துணைத் தலைவரான அவா் ஏன் ஒரு வாா்த்தை கூட பேச முடியாமல் மறைந்திருக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. இது அனைவருக்கும் தெரியும்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எங்கு சென்றாா்? அவா் ஏன் மறைந்துள்ளாா்? நாடாளுமன்றத்தில் பரபரப்பாக செயல்பட்டு வந்த அவா், ஏன் திடீரென முற்றிலும் மௌனமாகிவிட்டாா்? நாம் என்ன மாதிரியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்’ என்றாா்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். ஆளுங்கட்சியுடனான அவரது உறவு மோசமடைந்ததே அவரின் திடீா் பதவி விலகலுக்குக் காரணம் என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.