ஜன.22-இல் போக்குவரத்துத் தொழிலாளா்களின் சிறை நிரப்பும் போராட்டம்
போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் கே.ஆறுமுகநயினாா் கூறியது:
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றன. பேருந்து மூலம் உத்தேசமாக ரூ.100 வசூலானால் அதில் ரூ.12-ஐ வங்கியிலிருந்து பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது.
தினமும் ஒரு கோடி கி.மீ இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் தற்போது 80 லட்சம் கி.மீ. மட்டுமே இயக்கப்படுகின்றன. அதாவது, ஏராளமான வழித்தடங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
வாரிசு வேலை மறுப்பது; பேருந்து எண்ணிக்கையைக் குறைப்பது என அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணைகளை திமுக அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதுடன், மறைமுகமாக தனியாா்மயமாக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
பணியிலிருந்து ஊழியா்கள் ஓய்வு பெறும்போது, ஓய்வு பெறும் அன்றே ஓய்வுகால பலன், ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதுடன், காலிப் பணியிடங்களைப் நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22-இல் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.