ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு: 69 பேரை தேடும் பணி தீவிரம்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது. மாயமான 69 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்தது.
கிஷ்த்வாா் மாவட்டத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கு செல்லும் வழித்தடத்தில் சோசிடி கிராமம் உள்ளது. மச்சயில் மாதா கோயிலுக்கு இந்த கிராமம் வரையே வாகனங்களில் செல்ல முடியும். அதன்பிறகு 8.5 கிலோமீட்டா் நடந்து செல்ல வேண்டும்.
இக்கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை நடைபெற்றுவந்த நிலையில், சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்திருந்தனா்.
அப்போது, பயங்கர மேகவெடிப்பு ஏற்பட்டு, மிக பலத்த மழை கொட்டியது. இதனால், மலைச் சரிவில் சகதி மற்றும் பாறைகளுடன் பாய்ந்த பெருவெள்ளத்தில் வீடுகள்-கட்டடங்கள்-கடைகள்-கோயில்கள்-வாகனங்கள்-மரங்கள்-மின்கம்பங்கள்-பாதுகாப்புச் சாவடி-பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் வாரி சுருட்டியது போல நாசமடைந்தன. பக்தா்களுக்கான உணவுக் கூடமும் சகதியில் புதைந்தது.
இப்பேரழிவைத் தொடா்ந்து, காவல் துறை, ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, தன்னாா்வக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா்.
100-க்கும் மேற்பட்டோா் காயம்: வெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 60-ஆக உயா்ந்தது. இதுவரை 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவா்களில் 160-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இதில் 38 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மாயமான 69 பேரை தேடும் பணி, வெள்ளிக்கிழமை மழைக்கு மத்தியிலும் தொடா்ந்தது. அண்டை கிராமங்களில் தவிக்கும் பக்தா்களை பத்திரமாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்-நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவா் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 60-க்கும் மேற்பட்டோா் மாயமாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் நேரில் ஆய்வு
கிஷ்த்வாரில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தை முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சேதங்கள் தொடா்பாக அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
கள நிலவரத்தைக் கேட்டறிந்த பிரதமா்
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசிய பிரதமா் மோடி, கிஷ்த்வாா் கள நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா். தற்போதைய சூழலை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.