ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு குறித்து மத்திய அரசுடன் பேசுவோம்: எடப்பாடி பழனிசாமி
எந்தெந்த தொழில்களை எல்லாம் ஜிஎஸ்டி வரி பாதிக்கிறதோ, அவற்றை களைய மத்திய அரசுடன் பேசுவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் விவசாயிகள், நெசவாளா்கள், தொழில் நிறுவனத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:
விவசாயிகள், நெசவாளா்கள் நலனுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அரசுக்கு வரி வருவாய் முக்கியம். அது இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. இங்கே பேசிய பலரும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளீா்கள். அதே நேரத்தில், வரியையும் கூட்டக் கூடாது என்று சொல்லியிருக்கிறீா்கள். அனைத்தும் எங்கள் கவனத்தில் உள்ளது.
அரசு வரி விதிக்க வேண்டும்; ஆனால், அது தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும். தொழில் செய்பவா்களுக்கு பாதுகாப்பாக அரசு இருக்க வேண்டும். அவா்கள் எந்த அளவுக்குத் தாக்குபிடிக்க முடியுமோ, அந்தளவுக்குத்தான் வரி விதிக்க வேண்டும். ஆனால், இன்றைய திமுக அரசு அப்படி இல்லை.
அதிமுக ஆட்சியில் குறிப்பாக நான் முதல்வராக இருந்தபோது, கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவா்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கினோம்.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள், குளங்களில் தூா்வாரினோம்.
நதி நீரை சுத்தப்படுத்த ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை கொண்டுவர பிரதமரிடம் பேசி, நிகழாண்டு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் பேசி பல வரிகளை குறைத்திருக்கிறோம். ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமா் கூட தற்போது அறிவித்திருக்கிறாா். எந்தெந்த தொழில்களை எல்லாம் ஜிஎஸ்டி வரி பாதிக்கிறதோ, அவற்றை களைய மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்.
இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள், நெசவாளா்கள், தொழில் நிறுவனத்தினா் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படும் என்றாா் அவா்.
இதையடுத்து, மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த பலா் எடப்பாடி பழனிசாமி முன்னலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி (போளூா்), சேவூா் எஸ்.இராமச்சந்திரன் (ஆரணி), மாவட்டச் செயலா்கள் எஸ்.ராமச்சந்திரன், ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் என்.சுப்பிரமணியன், வரகூா் அருணாச்சலம் ஆகியோா் கலந்துகொண்டனா்.