``ஜூனியர் என்.டி.ஆர் அளவுக்கு இல்லையென்றாலும்''- ருக்மிணி வசந்தை அவமதித்தாரா தயாரிப்பாளர்?
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.
பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த கன்னட திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு வந்து பாராட்டுகளை அள்ளியிருந்தது.
தற்போது இப்படத்தை புரொமோட் செய்ய படக்குழுவினர் கேரளா, ஹைதராபாத் என சுற்றி வருகிறார்கள்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஈவென்ட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ருக்மிணி வசந்த் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை உறுதி செய்தார்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ருக்மிணி வசந்த் குறித்துப் பேசுகையில் அவரை அவமதித்ததாக சமூக வலைதளப் பக்கங்களில் ரவி ஷங்கரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஹைதராபாத் நிகழ்வுக்கு ஜூனியர் என்.டி.ஆரும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வில் ருக்மிணி வசந்த் குறித்து ரவி ஷங்கர், ``நாயகி ருக்மிணி வசந்த். அவர் எங்களுடைய தயாரிப்பில், பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
அவர் நடிக்கும் விதத்தை நான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அவர் அற்புதமாக நடிக்கக்கூடியவர்.

என்.டி.ஆரின் திறமைக்கு ஈடு கொடுக்கக்கூடிய அல்லது குறைந்தபட்சம் அதற்கு நெருக்கமாக வரக்கூடிய ஒரு நாயகியை மாதக்கணக்கில் தேடினோம்.
எங்களால் ருக்மிணியில் மட்டுமே அதைக் காண முடிந்தது. ஒருவேளை அண்ணன் (சகோதரர்) அளவுக்கு இல்லையென்றாலும், நீங்கள் குறைந்தபட்சம் 80% அளவாவது தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," எனப் பேசியிருந்தார்.
இப்படி என்.டி.ஆரோடு ருக்மிணி வசந்தை ஒப்பிட்டுப் பேசி அவமதித்ததாக ரவி ஷங்கரை சமூக வலைதளப் பக்கங்களில் பலர் விமர்சித்து வருகிறார்கள்.