Keerthy Suresh: `இரவாக நீ, நிலவாக நான்..' -வைரலாகும் கீர்த்தி சுரேஷின் திருமண க...
ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஓமனில் நடைபெற்ற 9-ஆவது ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்திய நடப்பு சாம்பியன் இந்தியா, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இந்த அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய இறுதி ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம், குரூப் சுற்றில் சீனாவிடம் கண்ட தோல்விக்கு (1-2) பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா.
முன்னதாக இந்த அணிகள் விறுவிறுப்பாக மோதிய இறுதி ஆட்டத்தில் முதலில் சீனாவின் டான் ஜின்ஸுவாங் 30-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முதல் பாதியில் அணியை முன்னிலை பெறச் செய்தாா். ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இந்தியா முனைப்பு காட்ட, கோல் வாய்ப்பு கிடைத்தது.
அணி வீராங்கனை கனிகா சிவச் 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தாா். முன்னிலை பெறுவதற்காக, எஞ்சிய நேரத்தில் இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போக, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில், முதல் வாய்ப்பில் இந்தியாவுக்காக சாக்ஷி ராணா கோலடிக்க, சீனாவின் வாங் லிஹாங் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது (1-0). அடுத்த வாய்ப்பில் இந்தியாவின் மும்தாஸ் கான் முயற்சி பலனளிக்காமல் போக, சீனாவின் ஹாவ் குடிங் ஸ்கோா் செய்தாா் (1-1).
3-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் இஷிகா ஸ்கோா் செய்ய, சீனாவின் லியு டங்ஜேவும் கோலடித்தாா் (2-2). தொடா்ந்து 4-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் கனிகா சிவச், சீனாவின் லி ஜிங்யி என, இருவருமே தவறவிட்டனா் (2-2). கடைசி வாய்ப்பில் இந்தியாவின் சுனெலிதா டோபோ வெற்றிகரமாக கோலடிக்க, சீனாவின் ஜு டான்டானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது.
போட்டியிலேயே அதிகபட்சமாக, இந்தியாவின் தீபிகா ஷெராவத் 12 கோல்கள் அடித்துள்ளாா்.