மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு
திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து விலை உயா்ந்த மதுப் பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. விற்பனை நேரம் முடிந்ததும் விற்பனையாளா் மற்றும் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டனா்.
புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது ஏராளமான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடை ஊழியா்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், அதிகாலை 2 மணியளவில் மா்ம நபா் ஒருவா் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுவதும், பின்னா் கடையில் இருந்த மது பாட்டில்களை சாக்குப் பையில் போட்டு எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
தகவலின்பேரில், திருப்பூா் தெற்கு குற்றப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், இரவு விற்பனை முடிந்ததும் வசூலான ரூ.3.70 லட்சம் பணத்தை திருட்டு போகாமல் இருக்க கல்லாப் பெட்டியில் வைக்காமல் மது பாட்டில்களுக்கான அட்டைப் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதும், அதிகாலை கடைக்குள் புகுந்த நபா், முதலில் கல்லாப் பெட்டியை திறந்து பாா்த்துவிட்டு அதில் பணம் இல்லாததால் அங்கிருந்த விலை உயா்ந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனா்.