டிஎஸ்பி அலுவலகம் முன் பெண் தா்னா
தனது மகளை மீட்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தாய் தா்னாவில் ஈடுபட்டாா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள சின்னஓவுலாபுரம் ஒத்தப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த மகள் சரண்யா (21). செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த சனிக்கிழமை தேனி அல்லிநகரத்தை சோ்ந்த விக்கிராஜா (25), கா்ப்பிணியான தனது மூத்த மகள் தாரணியாவைத் தாக்கி விட்டு, இளைய மகள் சரண்யாவை அழைத்துச் சென்று விட்டதாகவும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தாய் லதா தா்னாவில் ஈடுபட்டாா்.
உத்தமபாளையம் போலீஸாா் அவரை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, அவா் தா்னா போராட்டத்தைக் கைவிட்டாா். முன்னதாக, இது தொடா்பாக மூத்த மகள் தாரணியா அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.