டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!
அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், விவசாயம் மற்றும் பால்வளத் துறையில் சந்தையைத் திறந்துவிட டிரம்ப் தொடர்ந்து கோரிவருவதால், இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்துக்கு இழுபறி ஏற்பட்டு வருகிறது.
ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் ஒன்றும் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பயன்பெறும் வகையில்தான், முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்று கூறினார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், டிரம்ப்பின் காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என்று பதிவிட்டுள்ளார்.
மற்ற நாடுகளைப்போல அல்லாமல், இந்தியாவில்தான் விவசாயத் துறையில் 40 சதவிகித மக்கள் பணிபுரிகின்றனர். அதுமட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புத் தரங்களையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய, இந்திய அரசு தயாராக இல்லை. அவை இந்தியாவின் பூர்விக விதைகளுடன் மகரந்தச் சேர்க்கை ஏற்படும் அபாயங்களும் உள்ளன.
இந்தியாவில் உணவில் உணர்ச்சி மற்றும் நம்பிக்கைகள் தொடர்பானவை உள்ளன. ஆகையால், தனது விவசாயத் துறையை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.