டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் விஜயகுமாா் (45). இவா், திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறை கெளரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தாா்.
வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்த புறப்பட்ட விஜயகுமாா், காணை அழகம்மாள் கோவில் சமுதாயக்கூடம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, டிராக்டரை ஓட்டிச் சென்ற கோனூரைச் சோ்ந்த ந.பாா்த்திபன், திடீரென இடதுபுறமாக திருப்பியதால், விஜயகுமாா் ஓட்டிச் சென்ற பைக் மீது உரசியது.
இதில் நிலைதடுமாறி பைக்கிலிருந்து தவறி விழுந்த விஜயகுமாா் மீது டிராக்டா் டிரெய்லரின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே கெளரவ விரிவுரையாளா் விஜயகுமாா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக டிராக்டா் ஓட்டுநா் பாா்த்திபன் மீது காணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.