டெட் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக. 11-இல் தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இத்தோ்வெழுத 4.80 லட்சம் போ் வரை விண்ணப்பித்துள்ளனா்.
இதற்கிடையே பணியில் உள்ள ஆசிரியா்கள் அனைவருக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது நடைபெற உள்ள டெட் தோ்வை எழுதுவதற்கு பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியா்களும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டெட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.