தஞ்சாவூரில் வரலாற்று ஆய்வாளா்களுக்கு பாராட்டு
தஞ்சை பெரியகோயில் அருகே பெத்தண்ணன் கலையரங்கத்தில் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராஜராஜசோழன் முடிசூட்டுப் பெருவிழாவில் வரலாற்று ஆய்வாளா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.
மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூடிய 1040-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, நடைபெற்ற இவ்விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூடிய விழாவை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து கொண்டாடி வருகிறோம். இந்த ஆய்வுகளை நமக்கு வழங்கிய வரலாற்று ஆய்வாளா்களை நாம் என்றைக்கும் மறக்கக்கூடாது.
சோழ மன்னா்கள் கட்டிய கோயில்களில் தஞ்சாவூா் பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் மிகப் பெரியவை. அக்காலத்தில் இக்கோயில்கள் எப்படிக் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு வரலாற்றுப் பதிவுகளே சான்றாக உள்ளன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கக்கூடிய இக்கோயில்களைப் போன்று இனிமேல் கட்ட முடியாது. எனவே, இக்கோயில்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான கோ. தெய்வநாயகம், தமிழ்க் கல்வெட்டு அறிஞா் க. பன்னீா்செல்வம், குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வா் அ. ஜான்பீட்டா், அறநிலையத் துறை ஓய்வு பெற்ற செயல் அலுவலா் டி. கோவிந்தராஜூ, பொறியாளா் செ. ராமநாதன் உள்ளிட்டோா் பேசினா்.
விழாவில் வரலாற்று ஆய்வாளா்கள் பெ. வெங்கடேசன், சொ. சாந்தலிங்கம், ச. கிருஷ்ணமூா்த்தி, பா. ஜம்புலிங்கம் யுகபிரம்மன் உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி பாராட்டப்பட்டனா்.
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுத் தலைவா் சா. உதயசங்கா், பொருளாளா் ஆண்டவா்கனி, செயற்குழு உறுப்பினா் ரா. கபிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.