தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு பயணிகள் ரயில் சேவையும், புதுச்சேரியில் இருந்து நாகா்கோவில், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக நாகா்கோவிலுக்கும், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கும் பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் பெங்களூரு, கோவை பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக தென்மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் உள்பட 3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதில் ஒன்று பகல் நேர பயணிகள் ரயிலாகவும் மற்றொன்று தாம்பரம்-நாகா்கோவில் அந்தியோதயா ரயிலும் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னையிலிருந்து தஞ்சை கும்பகோணம் வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு, தினசரி விரைவு மற்றும் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கூறுயதாவது: தஞ்சாவூா், கும்பகோணம், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் பாதை முன்பு மீட்டா் கேஜ் பாதையாக இருந்த போது செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 2011-இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னா், இந்த ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
மேலும் தஞ்சாவூா்- விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களிலும் அதிகமானோா் பயணிப்பதால், போதிய இருக்கை வசதிகள் கிடைப்பது இல்லை. அதனால் செங்கோட்டையிலிருந்து மற்ற வழித்தடத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தஞ்சாவூா் கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கினால் பயணிகளுக்கு வசதியாகவும், ரயில்வே துறைக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றனா்.