உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்.
தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட்டடங்களைப் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மிகப்பெரிய கலாசார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூா் அரண்மனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூா் பெரிய கோயில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது.
இது மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் திகழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இத்தலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
சோழா் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பெரிய கோயிலின் தொல்லியல் மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கருதி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
பின்னா் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவா், கட்டடக் கலைகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடி, அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
அப்போது, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலா் சுதானந்தகுமாா் கான், முதுநிலை பராமரிப்பு அலுவலா்கள் சங்கா், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.