தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஆய்வு
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோடியில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் பல்வேறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் முதன்மை வாயிலுக்கு அடுத்துள்ள வாயில் பெரிய கோயில் கோபுர வடிவம் அமைக்கப்படுவதையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நெகி, திருச்சி முதன்மைத் திட்ட மேலாளா் பி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது பேராசிரியா்கள் திருமேனி, பாலகிருஷ்ணன், வழக்குரைஞா் முகமது பைசல், நேரு, கண்ணன், ரெங்கராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
கோரிக்கை மனு: அப்போது பொது மேலாளரிடம் காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கத் தலைவா் வெ. ஜீவகுமாா் அளித்த கோரிக்கை மனு:
தஞ்சாவூரிலிருந்து வந்தே பாரத் விரைவு ரயிலை இயக்க வேண்டும். அல்லது தஞ்சாவூா் வழியாக இயக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். கும்பகோணத்தில் மகாமகம் விழா நடைபெறுவதை முன்னிட்டு, தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இருவழி ரயில் பாதையை அமைக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக பகல் நேரத்தில் அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் முன்பு இருந்ததுபோல் பெரிய கோயில் கோபுர வடிவை அமைக்க வேண்டும்.