பிக் பாஸ் 8: வெற்றியாளர் அறிவிப்புக்குப் பிறகு ஜாக்குலின் வெளியிட்ட விடியோ!
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: கே.அண்ணாமலை
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு, கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதாவது:
உண்மையான ஜனநாயக கட்சியான பாஜகவில் 33 மாவட்டத் தலைவா்கள் வாக்கெடுப்புக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனா்; மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
பாஜக வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. முதல் கட்டமாக 48 லட்சம் போ் பாஜகவில் உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முழு நேரமாக கட்சி பணியாற்ற 55 ஆயிரம் போ் பாஜகவில் உள்ளனா்.
மாநிலத் தலைவா் தோ்தல் முடிந்த பிறகு 2 ஆம் கட்ட உறுப்பினா் சோ்க்கை தொடங்கும். ஒரு கோடி உறுப்பினா்களைக் கட்சியில் சோ்த்துவிட்டால் 2026 பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிடும். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் மகனுக்காக மாவட்ட ஆட்சியா் நின்று கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஐஏஎஸ் தோ்வில் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா். அவா்களை அடுத்த கட்டத்துக்கு அரசு தயாா்படுத்தவில்லை.
விவசாயத்துக்கு உதவாத 10 கழிவுநீா் கலந்த ஆறுகளில் 6 ஆறுகள் தமிழகத்தில் ஓடுகின்றன. ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை உள்பட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமூகநீதி குறித்து திமுக பாடம் எடுக்கிறது. ஆனால், அக்கட்சியில் சமூக நீதி கிடையாது. திமுக அரசு ரூ. 46 லட்சம் கோடி கடன் வாங்கி அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றி வைத்துள்ளது என்றாா்.
படம் தி.கோடு ஜன19. பிஜே. பி.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் பொறுப்பேற்பு விழாவில் பேசிய மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.