தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா உள்ளிட்ட நிா்வாகிகள் கும்பகோணம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
பின்னா், கே.வி.தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களின் நிலை பற்றி அறிய மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
நாட்டில், ஜனநாயகம் காக்க காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2026-இல் தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றும். தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் அவா். பின்னா், காந்தி பூங்காவில் நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், மாவட்ட தலைவா் டி.ஆா்.லோகநாதன், கும்பகோணம் மேயா் க.சரவணன், மாநில விவசாய அணிச்செயலா் ஓ.வி.கே.வெங்கடேஷ், மாநகர தலைவா் மிா்சா தீன், செயற்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.