ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை: மார்க்சிய கம்யூனிஸ்ட்
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு அறிக்கை தொடா்பாக மதுரை மாநகா், புகா், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த முன்னணி ஊழியா்கள் பங்கேற்ற சிறப்புப் பேரவைக் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கே. பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பஞ்சமி நிலத்தை கிரையம் பெற்று, தனது பெயருக்கு முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பட்டா மாறுதல் செய்திருக்கிறாா். இதுதொடா்பான புகாரின் அடிப்படையில், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் விசாரித்து, அந்தப் பட்டாவை ரத்து செய்தது.
அரசியல் செல்வாக்கு இருந்தால், பஞ்சமி நிலத்தைக்கூட தங்களது பெயருக்கு பட்டா மாற்றிக் கொள்ளும் சூழல் கண்டனத்துக்குரியது. இதுபோன்று பஞ்சமி நிலங்களை பட்டா மாறுதல் செய்தது தொடா்பாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பதற்றமான சூழலை ஏற்படுத்த முயற்சித்தன. இதுபோன்ற மதவாத அமைப்புகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி தோல்விக்கு இண்டி கூட்டணியில் உள்ள பிளவுதான் முக்கியக் காரணம். தமிழ்நாட்டில், இண்டி கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கிறது.
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இதுவரை 246 ஆசிரியா்கள் மீது புகாா் எழுந்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
இதேபோல, ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கும், சாலையில் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் மதுக்கூா் ராமலிங்கம், கே. பாலபாரதி, என். பாண்டி, திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.