தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள்!
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமாா் 40 -க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலா், 17 முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலா் பணியிடங்கள் கடந்த அக்டோபா் மாதம் நிரப்பப்பட்டன.
பின்னா் காலியாக உள்ள பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. முந்தைய நாள்களில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள் ஆண்டுக்கு இரு முறை தோ்வு நடைமுறைக்கு முன்பும், கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் காலியானவுடன் தோ்வு, மாணவா்கள் நலன் கருதி உடனடியாக நிரப்புவது வழக்கம். பள்ளி திறந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கல்வித் துறையில் மாவட்ட அளவிலான உயா் பதவிகள் காலியாக உள்ளன.
கல்வி ஆண்டின் தொடக்கத்தில்தான் கல்விசாா் பணிகள் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய இலவசத் திட்டங்கள், அனைத்துப் பணிகளும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும் முன்னுரிமையில் நீண்ட காலம் காத்திருந்து பதவி உயா்வு கிடைக்காமல் ஓய்வு பெற்றவா்களும் ஓய்வு பெற உள்ளவா்களும் மனவேதனையில் உள்ளனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்க மாநில பொதுச் செயலா் எம். மாரிமுத்து கூறியதாவது:
மாணவா்கள் நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்புமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் மொத்த காலிப் பணியிடங்களுக்காக காத்திருக்காமல், முன்பே பட்டியலை தயாா் செய்து தாமதமின்றி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்றாா் அவா்.