"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியவை விவசாயிகளுக்கான மானியத் திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள வேளாண் இணை இயக்குநா், உதவி இயக்குநா் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். சோழகங்கம் எனும் பொன்னேரியைத் தூா்வாரி, மதகுகளைச் சீரமைக்க தமிழக அரசு ரூ.19.25 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் உள்ள 643 ஊராட்சி சிறுபாசன குளங்களின் வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும். உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடத்தை மையமாகக் கொண்டு முந்திரிக்கொட்டைத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். செந்துறையில் முந்திரி பழச்சாறு, கடலை மண்டி, சுத்தமல்லி கிராமத்தில் கடலை மண்டி அமைக்க வேண்டும். கூட்டுறவு வேளாண் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட கோரி கடுமையாக வற்புறுத்துவதைக் கைவிட வேண்டும். யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க் கடனை காலதாமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சா. சின்னப்பன், ஒன்றியத் தலைவா்கள் செந்துறை சிவலிங்கம், கண்ணன், அரியலூா் அறிவழகன் மற்றும் வனிதாமணி, சங்கீதா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
