தமிழக சிறைகளில் விரைவில் "டாமினன்ட்' கோபுரங்கள்!கைதிகளின் கைப்பேசி ராஜ்ஜியத்தை ஒழிக்க நடவடிக்கை
தமிழக சிறைகளில் கைப்பேசி சிக்னல்களை முற்றிலுமாக முடக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் "டாமினன்ட் டவர்ஸ்' என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்கும் வலையமைப்புக் கோபுரங்கள் (நெட்வொர்க் டவர்ஸ்) அமைக்கப்பட உள்ளன.
தமிழக சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள், 149 மாவட்ட சிறைகள், 5 பெண்கள் தனிச்சிறைகள், 82 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்பட மொத்தம் 141 சிறைகள் உள்ளன. இவை 24,513 பேரை அடைப்பதற்குரிய வசதிகள் கொண்டவை. ஆனால், சுமார் 20,000 கைதிகள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள், 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகள். மொத்தம் உள்ள கைதிகளில் 60 சதவீதம் பேர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பழைய தொழில்நுட்பம்: மத்திய சிறைகளுக்குள் அனைத்துப் பொருள்களும் உடைமைகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனர் மூலமும், சிறைக் காவலர்கள் மூலமும் பலகட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இவற்றையும் மீறி சிறைக்குள் கஞ்சா, பீடி, சிகரெட், கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவது மற்றும் பிறகு அவை பறிமுதல் செய்யப்படுவது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.
இதையடுத்து, மத்திய சிறைகளில் கைப்பேசி பயன்பாட்டை முடக்க உயர் பாதுகாப்பு பிரிவில் கைப்பேசி ஜாமர்கள் 2017-ஆம் ஆண்டு பொருத்தப்பட்டன. ஆனால், 2 ஜி, 3ஜி அலைவரிசை மூலம் இயங்கும் கைப்பேசிகளை மட்டுமே அவை முடக்கும். தற்போது 4 ஜி, 5 ஜி அலைவரிசை கைப்பேசிகள் புழக்கத்தில் உள்ளன.
புழல் சிறையில் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் கைதிகள் பயன்படுத்திய 101 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 141 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 34 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 56 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்பெல்லாம் சிறைக்கு வெளியே உள்ளவர்களுடன் பேச மட்டுமே கைப்பேசிகளை கைதிகள் சட்டவிரோதமாக பயன்படுத்தினர். இப்போதோ இன்டர்நெட் செயலிகளின் மூலம் விடியோ அழைப்பு மேற்கொண்டு சட்டவிரோத செயல்களில் "குட்டி ராஜ்ஜியம்' போல ஈடுபடுகின்றனர். சிறை நிகழ்வுகளை விடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதும் ஆங்காங்கே நடக்கின்றன.
அண்மையில் புழல் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத வழக்குகளில் கைதான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரிடமிருந்து 3 கைப்பேசிகளின் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காவல் மற்றும் சிறைத் துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோதனை முயற்சி: இதையடுத்து, நாட்டிலேயே முதலாவதாக, திகார் மத்திய சிறையில் அறிமுகம் செய்யப்பட்ட "டாமினன்ட் டவர்ஸ் தொழில்நுட்ப முறையை தமிழக சிறைகளில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் டாமினன்ட் தொழில்நுட்பக் கோபுரங்கள், அனைத்து வகை அலைவரிசை கைப்பேசிகளின் சேவை மட்டுமன்றி கைப்பேசி சேவை சார்ந்த குறுஞ்செய்தி, இணையதள சேவை உள்ளிட்ட அனைத்தையும் முடக்கும்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த ஆண்டு இந்தக் கோபுரம் நிறுவப்பட்டு, அங்கு கைதிகளின் கைப்பேசி பயன்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டது. அதன் விளைவாக மாநிலத்தின் பிற சிறைகளுக்கும் இந்த வகை கோபுரங்களை நிறுவ கர்நாடக அரசு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் முதலில் புழல் சிறை வளாகத்தில் டாமினன்ட் கோபுரங்களை சோதனை அடிப்படையில் நிறுவ சிறைத் துறை திட்டமிட்டுள்ளது. அதில் கிடைக்கும் அனுபவத்தையும்,வெற்றியையும் பொறுத்து அடுத்தகட்டமாக மாநிலத்தில் உள்ள பிற சிறைகளுக்கு இச்செயல்முறை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. இதற்கான வரைவுத் திட்டம் தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இசைவு கிடைத்தவுடன் திட்டம் அமலாகும் என்கின்றனர் சிறைத் துறை அதிகாரிகள்.
எப்படி செயல்படும்?
கைப்பேசி கோபுரங்கள் போன்றே "டாமினன்ட் டவர்கள்' சிறை வளாகத்தில் நிறுவப்படும். அவை குறைந்தது சுமார் 2 கி.மீ. சுற்று வட்டாரத்துக்கு கைப்பேசி சேவையை முடக்கும். கைப்பேசி கோபுரங்கள் போல ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கும். கைப்பேசியை முடக்குவதற்கு டி-ஹெச்சிபிஎஸ் எனப்படும் "தி ஹார்மோனியஸ் கால் பிளாக்கிங் சிஸ்டம்' என்ற செயற்கை நுண்ணறிவு இயங்குதள தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது கைப்பேசி சார்ந்த அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் முடக்கும். பிற ஜாமர்களைவிட இந்தத் தொழில்நுட்பத்துக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
ஹார்மோனியஸ் கால் பிளாக்கிங் சிஸ்டத்தின் மத்திய தொகுப்பில் பதிவேற்றப்பட்ட கைப்பேசி எண்களின் செயல்பாடு முடக்கப்படுவதில்லை. இதனால் சிறைத் துறை அதிகாரிகள், சிறைக் காவலர்களின் கைப்பேசி சேவைகள் முடங்காது. இத்தொழில்நுட்பம் மூன்று வகைகளில் செயலாற்றும். முதலாவது, கைப்பேசி அழைப்புகளை முற்றிலும் தடுப்பது, இரண்டாவது அழைப்புகளை அனுமதித்து கண்காணித்து அது குறித்த தகவல்களைப் பெறுவது, மூன்றாவது எந்த இடையூறுமின்றி அழைப்புகளைக் கட்டுப்பாடின்றி அனுமதிப்பது ஆகும்.