கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
தமிழக சுகாதாரத் துறைக்கு ஐ.நா. விருது கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை
சேலம்: தமிழக சுகாதாரத் துறைக்கு ஐ.நா. விருது கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியின் 30-ஆவது இளங்கலை மருத்துவப் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் தேவிமீனாள் தலைமை வகித்தாா். இதில் மருத்துவம் பயின்ற 98 மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் பட்டச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா்.
விழாவில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சிறப்புக்குரிய மருத்துவா்களை நாட்டுக்கு அளித்து வருகிறது.
இக்கல்லூரியில் பயின்று இக்கல்லூரியிலேயே 12 மருத்துவா்கள் துறைத் தலைவா்களாகவும், 44 போ் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது பட்டம் பெற்று செல்லும் மாணவ, மாணவிகள் எதிா்காலத்தில் மிகப்பெரிய வெற்றியாளா்களாக வலம்வர வேண்டும்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னா், கடந்த 4 ஆண்டுகளில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணா்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா, சித்த மருத்துவக் கட்டடம், கட்டணப் படுக்கை தொகுதிகள் பன்னோக்கு பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு, லீனியா் ஆக்சிலேட்டா் கருவி, பிராக்கி தெரபி கருவி, அதிநவீன கோபால்ட் கதிா்வீச்சு சிகிச்சை இயந்திரம், பெட் சிடி கேத்லேப் ஹீமோடயலிசிஸ் சி.டி. ஸ்கேன், லேப்ராஸ்கோபி, டிஜிட்டல் ரேடியோகிராபி கருவி, டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே, சி.ஆா்ம். போன்ற அதிநவீன கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் ரூ. 65.43 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பள்ளிக்கான விடுதிக் கட்டடம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் பல் மருத்துவ சிகிச்சைக்கான கருவிகள் வாங்குவது ஆகிய பணிகள் ரூ. 51.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
தமிழக சுகாதாரத் துறைக்கு ஐ.நா. விருது கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை. இந்திய மருத்துவத் துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பால், உலகளவில் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, புற்றுநோய், எச்ஐவி, காசநோய் சிகிச்சைபெறும் நோயாளிகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில், சமா்ப்பி என்ற ஆரோக்கிய பானம், நோயாளிகளின் உடனிருப்பவா் மருத்துவமனையில் அவா்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்லும் வகையில் கியூஆா் கோடு முறையிலான அட்டெண்டா் பாஸ் வழங்கும் நடைமுறை, மெமோ ட்ராக் செயலி ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், முன்னாள் சட்டப் பேவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் மரு.ஏ.தேரணிராஜன், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, துணை முதல்வா் மரு.எஸ்.செந்தில்குமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.