பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
தமிழறிஞா் சிலையை அகற்ற தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தமிழறிஞா் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற தடை கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை விரகனூரைச் சோ்ந்த கனகவேல் பாண்டியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழறிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுத்தாளா், சுதந்திர போராட்ட தியாகி மட்டுமன்றி தேசிய கவிஞராகவும் திகழ்ந்தாா். தனது புலமையால் தமிழ் இலக்கியத்தில் நவீன சீா்திருத்தத்தை கொண்டு வந்தாா்.
மதுரையில் 5- ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே 5.1.1961- இல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலை திறக்கப்பட்டது. கடந்த 64 ஆண்டுகளாக அவரது சிலை எந்த இடையூறும் இல்லாமல் இருந்து வருகிறது.
அவரது பிறந்த நாள், நினைவு நாளின் போது பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், மாணவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். தற்போது சாலை விரிவாக்கப் பணிக்காக அந்தச்சிலையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். சில நாள்களுக்கு முன்பு சிலையை அகற்ற முயன்றபோது பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் போராட்டம் நடத்தியதால் முடிவை கைவிட்டனா். இருப்பினும் தல்லாகுளத்திலிருந்து சிலையை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனா். எனவே, சிலையை அகற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள், உயா்நிலை பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக அந்தப் பகுதியில் உள்ள தமிழறிஞா் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை மட்டுமன்றி உ.வே.சா. உள்ளிட்ட சிலைகளும் அகற்றப்பட உள்ளன. சிலைகளை அங்கிருந்து எடுத்து வேறு இடத்துக்கு மாற்றி அமைப்பது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.