உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
தமிழிசை டெல்லி விசிட்.. போராடும் அண்ணாமலை... பரபரக்கும் பாஜக முகாம்!
பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.2024 அன்று பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "பூத்துக்கு 400 பேரைச் சேர்க்க வேண்டும் என டெல்லி டார்கெட் கொடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு கோடி பேரைச் சேர்ப்பதற்கான பணிகள் நடக்கிறது" என்றார்.
இதையடுத்து இப்பணியை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் டெல்லி நிர்ணயித்த இலக்கில் பாதியைக்கூட நெருங்க முடியாமல் தமிழக பா.ஜ.க தலைவர்கள் தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியானது. இதனால் அமைப்பு தேர்தல்களை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பூத் கமிட்டி அமைக்க முடியும். ஆனால் சிறுபான்மையினர் அதிகம் உள்ள சில பகுதிகளில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இணையவில்லை என்கிறார்கள். இதனால் அமைப்புத் தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களையே மீண்டும் மண்டல தலைவர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், மாநில தலைவர் பதவியை பிடிப்பதில் அண்ணாமலை, தமிழிசை இடையே மீண்டும் கடும் போட்டி நிலவி வருகிறது என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "தொடக்கத்திலிருந்தே மூத்த நிர்வாகிகளை புறக்கணிக்கிறார். தனக்கு மட்டுமே விளம்பரம் தேடிக்கொள்கிறார் என ஏராளமான விமர்சனங்கள் அண்ணாமலை மீது முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது.
முடிவில் பா.ஜ.க தோல்வியை சந்தித்தது. அ.தி.மு.க வெளியேறியதால்தான் பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்கு அண்ணாமலைதான் காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக டெல்லிக்கும் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழிசை, அண்ணாமலை இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியில் அண்ணாமலைக்கு ஆதரவு இருந்தாலும் கூட்டணி விவகாரத்தில் கொஞ்சம் அப்செட் தான் என்கிறார்கள்.
இந்த சூழலில்தான் ஒருகோடி பேரை உறுப்பினராக இணைக்கும் டெல்லியின் திட்டமும் நிறைவேறவில்லை. இது அகில இந்திய தலைவர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. இருந்தாலும் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மாநிலத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது லண்டனில் இருந்ததாக கூறியிருக்கிறார். மறுபக்கம் தமிழிசை செளந்திரராஜன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரும் தீவிரமாக காய் நகர்த்துகிறார்கள்.
இதில் தமிழிசைதான் முதலிடத்தில் இருக்கிறார். சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார், தமிழிசை. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியவர், "அந்தமான் நிகோபாருக்கான பா.ஜ.க தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன். இது தொடர்பாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பற்றியும் நட்டாவிடம் பேச உள்ளேன்" என தெரிவித்திருந்தார். அதன்படி நட்டாவை சந்தித்த தமிழிசை பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தொடர்ந்து எந்தெந்த பகுதியில் எவ்வளவு உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், தி.மு.க-வின் நகர்வுகள், 2026 தேர்தலில் பா.ஜ.க எப்படி கூட்டணி அமைத்தால் வெற்றிபெற முடியும் என்பது குறித்தெல்லாம் சில தகவல்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக மாநில தலைவர் பதவி மீது தனக்குள்ள விருப்பம் குறித்தும் பேசியிருக்கிறார். இதையெல்லாம் கவனமாக கேட்ட நட்டா, "முதலில் குறிப்பிட்ட பகுதிகளில் அதிக உறுப்பினர்களை இணைத்ததற்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து உங்களது உழைப்புக்கு இதுநாள் வரை உரிய அங்கீகாரம் வழங்கினோம். அப்படித்தான் இனியும் இருக்கும். மாநில தலைவர் பதவிதான் என்று இல்லை தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கான பதவி நிச்சயம் வழங்கப்படும்" என தெரிவித்திருக்கிறார். இதனால் தமிழிசை தரப்பு ஹாப்பியாக இருக்கிறது. இருப்பினும் தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இதற்கு தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி யோசிக்கிறது. இருப்பினும் இறுதி நேரத்தில் முடிவுகள் மாறலாம்" என்றனர்.