'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - ப...
தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்
தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் தெரிவித்தாா்.
அண்ணா நகா்த் தமிழ்ச்சங்கம் சாா்பில் கவிக்கோ வா.மு.சேதுராமனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந. அருள், வா.மு.சேதுராமனின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:
கவிக்கோ வா.மு.சேதுராமன் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து, தமிழ் மொழியின் பெருமையைக் கொண்டு சோ்த்தாா். தற்போது வேஷ்டி கட்டுவதை ஒரு மாண்பாகக் கருதுகிறோம். ஆனால், வா.மு.சேதுராமன் 1980-களிலேயே வேஷ்டி அணிந்தபடிதான் அமெரிக்கா, ஐப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டாா்.
தமிழில் யாராவது தவறு செய்துவிட்டாலோ, தமிழ் மொழி குறித்து யாரேனும் தவறாகப் பேசினாலோ அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தாா் என்றாா்.
நிகழ்வில் முனைவா் மறைமலை இலக்குவனாா், அண்ணாநகா்த் தமிழ்ச் சங்கத் தலைவா் த.இராமலிங்கம், அனைத்திந்திய எழுத்தாளா்கள் சங்க தலைவா் இராம.குருநாதன், கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வா் வா.மு.சே. ஆண்டவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.