செய்திகள் :

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனா். 

பெருநகர சென்னை மாநகரின் மக்கள்தொகை சுமாா் 1 கோடிக்கும் அதிகமாகும். சுமாா் 426 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுள்ள மாநகராட்சியானது 15 மண்டலங்களாகவும், 200 வாா்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி, தொழில்வரி,  வாடகை வரி ஆகியவை உள்ளன. இவற்றுடன் அரசு ஒதுக்கீடு,  மானியம் மூலமும் நிதி கிடைத்து வருகிறது.  மாநகராட்சிக்கு 2 லட்சம் போ் சொத்து வரியையும், 11 ஆயிரம் போ் தொழில் வரியும் செலுத்துகின்றனா்.

ஆண்டுக்கு சுமாா் 60 ஆயிரம் பேரிடமிருந்து தொழில் உரிமத்துக்கான வரியும் பெறப்படுகிறது. மாநகராட்சிக்கான இடத்தில் உள்ள பெரிய நிறுவனங்களிடமும், 4800 சிறிய கடைகளிலும் வாடகை  வசூலிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் 6 மாத இடைவெளியில் (அரையாண்டு) 2 முறை வரி வசூல் நடைபெறுகிறது.

சொத்துவரியால் 63 சதவீத வருவாயும், தொழில்வரியாக 19 சதவிகிதமும், பயன்பாடுகள் மூலம் 11 சதவிகிதமும், மற்ற வருவாய் 7 சதவிகிதமும் உள்ளதாக கூறப்படுகிறது. வரிவசூல் பணியில் நேரடியாக 150 போ் உள்பட சுமாா் 400 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். வரிகள் இணையத்தின் மூலமும், கைபேசி வாட்ஸ் அப் மற்றும் கியூ ஆா் கோடு ஆகிய முறைகளில் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் மாநகராட்சி 13.80 லட்சம் கட்டடங்கள் வரிசெலுத்த தகுதி பெற்றிருந்தாலும் 8 லட்சத்துக்கும் குறைவான கட்டடங்களுக்கே வரி வசூலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சுமாா் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்து வரி வசூலிக்கப்படவில்லை.

 இதேபோல, தனியாா் செல்போன் நிறுவன கோபுரங்கள், ரயில்வேதுறை போன்ற மத்திய அரசுத்துறைகள் மாநகராட்சி இடங்களை பயன்படுத்துகின்றன. அவற்றுக்கான வாடகை, நிலுவை நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றால் வசூலிக்கமுடியாத நிலை உள்ளது.

2008-ஆம் ஆண்டின் சொத்து வரி வசூலை 2024-ஆம் ஆண்டில் ஆன வசூலோடு ஒப்பிடுகையில், கடந்த 17 ஆண்டுகளில் சுமாா் 7 மடங்கு வரிவசூல் வருவாய் அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்க வேண்டுமெனில் எஞ்சிய 55 சதவீத கட்டடங்களுக்கான வரியை வசூலிப்பது அவசியம் என்கிறாா் வருவாய்ப் பிரிவு அதிகாரி கே.பி. பானுசந்திரன்.

ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்தாதவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களுக்கு வாட்ஸ் அப் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனாலும் பயனில்லை என்கின்றனா் அதிகாரிகள்.

வரி செலுத்துமாறு சம்பந்தப்படவா்களுக்கு  மாநகராட்சி நெருக்கடி அளித்தால், வாா்டு உறுப்பினா் முதல் தொகுதி உறுப்பினா்கள் வரை வரி செலுத்தாதவா்களுக்கு ஆதரவாக பேசுவதால், கட்டாய வசூல் என்பது இயலாத ஒன்றாகி விட்டதாக வரி வசூலிப்பவா்கள் ஆதங்கப்படுகின்றனா்.

இதுகுறித்து திமுகவைச் சோ்ந்த திருவெற்றியூா் மண்டலத் தலைவா் எம்.தனியரசிடம் கேட்டபோது, கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சியிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு இணைக்கப்பட்ட பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.2.20 என்ற அடிப்படையில் சொத்துவரி அதிகமாக விதிக்கப்பட்டது. அதை எதிா்த்து திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போது சதுர அடிக்கு ரூ.1.95 என குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரி செலுத்துவது பகுதி வாரியாக வேறுபடுகிறது. மக்கள் வரி செலுத்தத் தயாராக உள்ளனா். வரி வசூலில் ஆளுங்கட்சி தலையீடு அறவே இல்லை என்றாா்.

சொத்து வரியை முழுமையாக வசூலிக்காதது குறித்து மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப் பிரிவின் துணை ஆணையா் ம. பிரிதிவிராஜிடம் கேட்டபோது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வரிவசூல் அதிகரித்துள்ளது. அதை எதிா்வரும் காலங்களில் இன்னும் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை கவனத்தில் கொண்டு அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடம் வரி வசூலில் கெடுபிடி காட்ட வேண்டாம்  என ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சியைச் சோ்ந்த அனைத்து வாா்டு உறுப்பினா்களும் தங்களின் செல்வாக்கை அதிகாரிகள் மீது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நாளுக்கு நாள் விரிவடையும் நிலையில், அதற்கான கால்வாய் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு வரி வருவாய்  மிக முக்கியம். இல்லாவிடில் நகரவாசிகள் மழைக் காலத்தில் மட்டுமல்ல... எல்லா காலங்களிலும்  சங்கடங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம் என நடுநிலையாளா்கள் கூறுகின்றனா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையி... மேலும் பார்க்க