தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: `பெண்ணுக்கு பரிசப்பணம் தந்து..!’ - 'ஆதியன்' பழங்குடி திருமணங்கள்
கந்தல் ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட மாடு, 'பூம்... பூம்... பூம்...' என்று ஸ்வரம் தவறாமல் இசைக்கும் உருமி, வண்ணத் தலைப்பாகையுடுத்தி தெலுங்கு கலந்த தமிழில் யாசிக்கும் மனிதர்... இவற்றைக் காணாதவர்கள் இருக்க முடியாது. போகிற போக்கில் வேடிக்கைப் பொருளாகக் கடந்து செல்கிற இந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் யார்? இவர்களின் பூர்வீகம் எது? மாட்டுக்கும் இவர்களுக்குமான பந்தம் எத்தகையது?
பூம்பூம் மாட்டுக்காரர்களின் பூர்வீகம், ஆந்திரா. ஆனால், இப்போதிருக்கும் பெரும்பாலான பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்களை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து தலைமுறையாக வாழ்வதால், அவர்கள் அப்படிக்கூறலாம். ஆயினும் மானுடவியல் ரீதியான ஆய்வில், இவர்கள் ஆந்திராவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்திற்கு வந்தவர்களாக இருக்கலாம் என்பது பொதுக்கருத்தாக இருக்கிறது.
திருப்பதி வெங்கடாசலபதியோடு தொன்மத்தொடர்பு கொண்டவர்கள் என்பதும் அதற்குச் சான்றாக இருக்கிறது. தவிர, இவர்கள் பேசும் மொழியும் தெலுங்கின் ஒரு பிரிவாக இருக்கிறது. மேலும், இவர்களைப் போன்ற நாடோடிகள் ஆந்திராவிலும் உண்டு. அவர்களை தெலுங்கில் 'கங்கேத்துலு' என்று அழைக்கிறார்கள். 'எத்து' என்பது மாட்டைக் குறிக்கும் சொல்லாததால் இருவருக்கும் மரபு ரீதியாக தொடர்பு இருக்கலாம் என்று மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு ஊருக்கு ஒரு பெயருண்டு. காஞ்சிபுரம், விழுப்புரத்தில் 'பெருமாள் மாட்டுக்காரர்'. தஞ்சை, நாகையில் 'பூம்பூம் மாட்டுக்காரர்'. புதுக்கோட்டை வட்டாரத்தில் 'தாதர் மாட்டுக்காரர்'. தென் மாவட்டங்களில் 'அழகர் மாட்டுக்காரர்'. பூவிடையர் என்பது பொதுவான பெயர். இந்திய அரசிதழ் இவர்களை 'ஆதியன்' என்கிறது.
தமிழகத்தில் தஞ்சை, நாகை, புதுகை, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பான்மையாக இம்மக்கள் வசிக்கிறார்கள். சுமார் 3 லட்சம் பேர் இருக்கக்கூடும். பெரும்பாலும், மரத்தடி, கோவில் கோபுர நிழல்களையே குடிலாக்கி வாழும் இவர்களில் 90 சதவிகிதம் பேர் இப்போது யாசகம் பெறுவதை விட்டுட்டு, குடை ரிப்பேர் செய்பவராக, பழைய துணிகள் வாங்குபவராக மாறிவிட்டார்கள்.
இம்மக்கள் தங்களை கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்றும், தங்கள் காலடி வைக்குமிடத்தில் பசுமை தங்காது என்றும் நம்புகிறார்கள். 'தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட இந்த மக்கள். 'இடையர் சமூகத்தின் ஒரு பிரிவினர்' என்று எஸ்கர் தர்ஸ்டன் வகைப்படுத்துகிறார். ஒரு காலத்தில் பூ தொடுத்து விற்கும் தொழிலைச் செய்தவர்கள் என்றும் இவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன். அதன் காரணமாகவே 'பூவிடையர்கள்' என்ற பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள். தாங்கள் திருப்பதி வெங்கடாசலபதிக்கும் அயோத்தி ராமருக்கும் பூத்தொடுத்து கொடுக்கும் உரிமை பெற்றவர்கள் என்று இந்த மக்கள் நம்புகிறார்கள்.
இன்றளவும் இம்மக்களின் வாழ்க்கையென்பது நாடோடித்தன்மை மிக்கதாகவே இருக்கிறது. ஆயினும் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் குடிசைகள் கட்டி நிரந்தரமாக ஓரிடத்தில் வசிக்கிறார்கள். ஆயினும் இம்மக்களும் தொழில் நிமித்தம் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். தொழில் இல்லாக்காலங்களிலும் சடங்குகள், வழிபாடுகள், இறப்பு, பிறப்புகள் நடக்கும் காலங்களிலுமே இம்மக்கள் தங்கள் குடிசைகளுக்குத் திரும்புகிறார்கள்.
யாசகம் தேடி பிற ஊர்களுக்குச் செல்லும்போது, ஆங்காங்கே இருக்கும் மைதானங்கள், மர நிழல்கள், கைவிடப்பட்ட கட்டடங்கள், கோயில்கள், சத்திரங்களிலேயே தங்குகிறார்கள். பெரும்பாலும் சமைப்பது இல்லை. மக்களிடம் யாசகம் பெற்றே உண்பார்கள். வெளியில் தொழிலுக்குச் செல்லும் காலங்களில் குழுவாகவே பயணிக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் என குடும்பத்துடனே தொழில்நாடிச் செல்கிறார்கள்.
பூம் பூம் மாட்டுக்காரர்கள், தங்களின் யாசக வாழ்க்கைக்குப் பின்னணியாக ஒரு தொன்மக்கதை சொல்கிறார்கள். தங்கள் மூதாதைகள் ராமரை ஏமாற்றியதாலேயே இன்று வரை தாங்கள் பிச்சையெடுக்க நேர்கிறது என்று தீரா குற்ற உணர்வைச் சுமக்கிறார்கள் இந்த மக்கள்.
"நாங்களும் ஒரு காலத்துல நிலபுலன்கள் வச்சு வேளாண்மை பாத்துப் பிழைச்சவங்கதான். இப்பிடி யாசகம் வாங்குற பொழப்புக்கு வந்ததுக்குக் காரணம், ராமர் கொடுத்த சாபம். இந்த மனுஷங்க எப்படிப்பட்ட ஆளுங்கன்னு சோதிக்கிறதுக்காக ஒரு நாள் ராமர் எங்காளுங்கக்கிட்ட வந்து யாசகம் கேட்டாரு. எங்காளுங்க எதுவும் கொடுக்கலே. ஆனா ராமர் விடலே... யாசகம் கேட்டு தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்தாரு. அவரை ஏமாத்தி துரத்த நினைச்ச எங்காளுங்க, இப்போ எங்க கையில எதுவும் இல்லை. 'வெள்ளாமை விளையட்டும்... இந்த வெள்ளாமையில மேல விளையுறதெல்லாம் உனக்கு... கீழே விளையுறதெல்லாம் எங்களுக்கு'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அது கடலை வெள்ளாமை. நிலக்கடலை நல்லா தூர்பிடிச்சு விளைஞ்சுச்சு. அறுவடைக் காலத்துல ராமர் வந்திருக்காரு. 'இந்தாப்பா மே விளைச்சல்'ன்னு சொல்லி செடியைக் கொடுத்துட்டு நிலக்கடலையெல்லாம் எங்காளுங்க எடுத்துக்கிட்டாங்க. ராமருக்கு கோபம் வந்திருச்சு. 'என்னங்கய்யா... விளைஞ்சதை நீங்க எடுத்துக்கிட்டு எனக்கு வெறும் செடியைத் தர்றீங்க'ன்னு கேட்டாரு.
'சரி விடுப்பா... வர்ற வெள்ளாமையில கீழ் விளைச்சல் உனக்கு, மேலே விளையுறது எங்களுக்கு'ன்னு சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பிட்டாங்க. அந்த பட்டத்துல நெல்லு விவசாயம் பண்ணியிருக்காங்க. அறுவடைக்கு வந்த ராமருக்கு 'இந்தாப்பா உன் அடிப்பங்கு'ன்னு சொல்லி வெறும் வைக்கோலை கொடுத்திருக்காங்க. எங்காளுங்க செஞ்ச வேலைப் பாத்து கோபமாயிட்டாரு ராமர். சுயரூபத்தைக் காட்டின ராமர், பக்கத்து வரப்புல கெடந்த ஒரு சுரக்குடுக்கையை பறிச்சுக் கையில குடுத்து, 'இனிமே உங்க கால்படுற இடத்துல பச்சையெல்லாம் கருகிடும். இந்தச் சுரக்குடுக்கையை வச்சு பிச்சையெடுத்துப் பிழைச்சுக்கோங்க'ன்னு சொல்லி விரட்டிட்டாரு. அன்னைக்குத் தொட்டு எங்க வாழ்க்கை இப்படி கையேந்திப் பொழைப்பாக் கெடக்கு..." என்கிறார் திருவாரூர் ஆதியன் குடியிருப்பில் வசிக்கும் காளியப்பன்.
இந்த நம்பிக்கையை வழிவழியாகச் சுமக்கும் இந்த மக்கள், சுரைக்குடுக்கையைத்தான் யாசகம் பெற பயன்படுத்தி வந்துள்ளார்கள். இன்று காசை கைகளிலும் தானியங்களைப் பைகளிலும் வாங்குகிறார்கள்.
காசு, பணம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை முறையில் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள் இம்மக்கள். நாடோடிகளாக ஊர் ஊராகப்போய் தொழில் செய்த காலம் முதல் தற்போது செட்டில்மென்ட்களாக தங்கி வாழும் காலம் வரை அவர்களின் கட்டமைப்பு வலுவாகவே இருக்கிறது.
குழுவுக்கு ஒரு தலைவரும் நாட்டாமையும் இருப்பார்கள். தலைவரை தெய்வம் தேர்வு செய்வதாக நம்பிக்கை. தெய்வத்தின் முன்னால் மக்கள் அனைவரும் அமர்ந்து அருளாடியின் குறிகேட்டு தலைவரைத் தேர்வு செய்வார்கள். நாட்டாமையை தலைவர் தேர்வு செய்வார். தலைவரும் நாட்டாமையும் சொல்வதே வேதவாக்கு. நாடோடி சமூகமாக இருந்தாலும் தற்போது, பல்வேறு இடங்களில் தங்கி இணைந்து வாழும் பண்பை இந்தச்சமூகம் எட்டிவிட்டது. குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை அனைவரும் கூடி தங்களுக்குள்ளான பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள். வேறொரு குழுவோடு ஏற்படும் பிரச்னைகள், தொழில் எல்லைகளுக்குள் வேறொருவர் நுழையும் பிரச்னைகளை தலைவரும் நாட்டாமையும் கடிப் பேசி தீர்ப்பார்கள்.
பூவிடையர் சமூகத்தில் சில குலப்பிரிவுகள் உண்டு.
1. கால்ச்சானோடு
2. கிழகாவோடு
3. முங்கோடு
4. மோதாலோடு
5. தாராவோடு
எல்லாப் பழங்குடி சமூகங்களுக்குள்ளுமே இதுமாதிரியான பிரிவுகள் இருக்கின்றன. மாமன், மச்சான், பங்காளிகளை பிரித்தறிந்து திருமண உறவு வைத்துக்கொள்ள ஏதுவாக இப்படியான பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பூம்பூம் மாட்டுக்காரர்கள் மத்தியில் முன்னர் குழந்தைத் திருமணங்கள் உண்டு . இப்போது பெருமளவு குறைந்துவிட்டது. தங்கள் சமூகத்துக்குள் உரிய உறவுடனான காதல் திருமணத்தை அங்கீகரிக்கிறார்கள். பெண் பிள்ளைகள் பிறந்தால் பெரிதும் மகிழ்கிறார்கள்.
பெண்கள் மூலம் பெற்றவர்களுக்கு பரிசப்பணம் கிடைக்கும். திருமணத்தின்போது மாப்பிள்ளை தரப்பே பெண்ணுக்கு வரதட்சணை தந்து திருமணம் செய்ய வேண்டும்.
சொந்தமாக மாடு வைத்துத் தொழில் செய்வது திருமணத்துக்கான ஓர் ஆண்மகனின் முக்கியத்தகுதி. இன்று அந்த நிலை மாறிவிட்டது. இன்றுள்ள தலைமுறை இந்தத் தொழிலிருந்து வெகுவாக விடுபட்டுவிட்டது. தவிர, இன்று கோயில்களில் மாடுகளை ஏலம் விட்டு விட்டு பணமாகி கோயில் கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள். முன்பு போல பூவிடையர்களை அழைத்துத் தருவதில்லை. சொந்தமாக மாடு வாங்கும் அளவுக்கு பொருளாதாரத்திறனும் பூவிடையர்களிடம் இல்லை. அதனால் இன்று மூத்த ஆதியன்களே மாடில்லாமல் வெறும் இசைக்கருவியோடு போய் யாசகம் பெறுகிறார்கள்.
பிற சமூகத்தினரை காதலித்து மணம் செய்வதை பூவிடையர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எச்சூழலிலும் தங்கள் குடும்பங்களுக்குள் அவர்களை இணைத்துக்கொள்வதில்லை. அவர்களை குடும்பத்திலிருந்து விலக்குவதற்காக சில சடங்கு நடைமுறைகளையும் வைத்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்தால்கூட காதல் திருமணம் செய்த பிள்ளைகளை அனுமதிப்பதில்லை.
இவர்கள் திருமண நிகழ்வு மிக மிக எளிமையானது.
ஒரு ஊரில் தகுந்த உறவு முறையில் தங்கள் பிள்ளைக்கு ஒரு பெண் இருப்பது தெரிந்தால், தங்கள் உறவுக்காரர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்வார்கள் அன்றைக்கு உணவுச்செலவு பெண் வீட்டாருடையது. மது வாங்கிக்கொடுக்கும் செலவு மாப்பிள்ளை வீட்டாருடையது. பெண் பார்க்கும் சடங்கு பெரும் களேபரமாகவே நடந்தேறுகிறது.
திருமணச் சடங்குகளில் பெண் வீட்டாரின் ஆதிக்கமே மிகுந்திருக்கும். மாப்பிள்ளையை பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் பிடித்திருந்தால், பரிசப்பணம் குறித்துப் பேசுவார்கள். பெண்ணின் உறவினர்கள், பெண் மற்றும் அவளின் குடும்பத்தாரின் அருமை, பெருமைகளைச் சொல்லி பரிசத்தை ஏற்றிவிடுவார்கள். பரிசப்பணம் தீர்மானிபரிசப்பணம்க்கப்பட்டு விட்டால், "மாப்பிள்ளையின் பழக்க வழக்கத்தைப் பார்க்கணும்" என்று பெண் வீட்டார் சொல்வார்கள்.
மாப்பிள்ளையை பெண் வீட்டிலேயே விட்டுவிட்டு பெற்றவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். மாப்பிள்ளை, பெண் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருப்பார். பெண் வீட்டாரின் மாடை ஓட்டிக்கொண்டு தொழிலுக்குச் செல்வார். வருமானத்தை பெண் வீட்டுக்கு தந்து அக்குடும்பத்தில் ஒருவராகவே இருப்பார். அந்தப்பெண்ணும் பையனும் கணவன்-மனைவி போலவே இருப்பார்கள். மாப்பிள்ளையின் நடத்தை திருப்தியாக இருந்து, பெண்ணுக்கும் பையனுக்கும் உறவுநிலை சீராக இருந்தால், தலைவருக்கும் நாட்டாமைக்கும் முறைப்படி தகவல் சொல்வார்கள்.
அவர்களுக்குரிய மரியாதை செய்து திருமணத்துக்கு நாள் குறிப்பார்கள். அந்த நாளில் உறவுகளுக்கெல்லாம் தகவல் தெரிவித்து திருமணம் செய்து வைப்பார்கள். பலபேர் குழந்தை, குட்டிகள் பெற்றபிறகு திருமணம் செய்துகொண்ட கதையெல்லாம் நடந்திருக்கிறது..." என்கிறார் பிச்சை.
இடையில், பெண்ணுக்கும் பையனுக்கும் மன வருத்தங்கள் வந்து ஒத்துப்போகாத நிலை வந்தாலும் தலைவருக்கும் நாட்டாமைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இருவீட்டாரிடம் சமாதானம் பேசி பிரித்து வைப்பார்கள்.
பூம்பூம் மாட்டுக்காரர் சமூகத்துக்குள்ளாக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஊருக்குப் பொதுவில் சில ரூபாய்களை அபராதமாக செலுத்த நேரிடும். ஆயினும் இன்றுவரை காதல் திருமணங்கள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. திருமண சடங்குகள் மிக எளிமையாகவே இருக்கின்றன. பஞ்சாயத்தார் ,பெரியவர்கள் முன்னிலையில் பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையிடம் பெண்ணின் கையைப் பிடித்துக் கொடுப்பார்.
நாடோடிகளாக வாழ்ந்தவரை இதோடு திருமண நடைமுறைகள் முடிந்துவிடும். எந்த நிழலில் தங்கியிருக்கிறார்களோ அதே நிழலில் திருமணம் முடிந்துவிடும்.
வீடுகளில் தங்கி வாழப்பழகிய பிறகு, வெகு சமுக நடைமுறைகள் இவர்கள் வாழ்க்கையிலும் திருமண முறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பெரியோர் நிச்சயிக்கும் திருமணத்தில் மாப்பிள்ளை பெண்ணுக்குப் பரிசம் கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பரிசப்பணம் கொடுக்கிறார்கள். தவிர தானியங்கள், ஆடைகளும் தரவேண்டும். திருமணம் மணமகன் இல்லத்தில் நடக்கும். மாப்பிள்ளை திருமணத்தன்று காதில் கடுக்கண் அணிய வேண்டும். பல வீடுகளில் பாரம்பர்யமாக மூத்தோர் அணிந்த கடுக்கனைச் சொத்துபோல பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
திருமண நிகழ்வுகளில் பிற சமூகத்தாரை இவர்கள் அனுமதிப்பதில்லை. வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அழைப்பார்கள்.
திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு மதியம் சைவ உணவு வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும் ஐந்து நாள்கள் இந்த ஊரிலேயே தங்கி விடுவார்கள். அவர்களுக்கான உணவுச்செலவை, அந்தப்பகுதியில் குடியிருக்கும் உறவுக்காரர்களே பகிர்ந்து கொள்கிறார்கள். ஆறாம் நாள், திருமண வீட்டின் முன் போடப்பட்ட கூரைப்பந்தலைப் பிரிப்பார்கள். அன்றையதினம் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்படும். இந்த விருந்துக்கென்று குழுவாகப் போய் மீன் பிடிப்பார்கள். காட்டுப்பூனை உள்ளிட்ட உயிரிகள் கிடைத்தால் விருந்து மேலும் களைகட்டும். அன்று ஆண், பெண் பேதமின்றி அனைவரும் மது அருந்துவர். சண்டை, சச்சரவு, பஞ்சாயத்துகள் என்று அன்றைய தினம் கொண்டாட்டமாகக் கழியும்.
திருமணம் முடிந்ததும் தாய், தந்தையை விட்டு மணமக்கள் தனிக்குடித்தனம் கிளம்பி விடுவர். ஆயினும் தொழில் நாடி இடம்பெயரும் தருணங்களில் கூட்டம், கூட்டமாகவே உறவுகளோடு செல்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு அடங்கியவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவுமே நடத்தப்படுகிறார்கள்.
ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்வது வழக்கத்தில் இருந்தது. இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல் அதிகளவிளல் குழந்தை பெற்றுக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. அண்மைக்காலமாக அதுவும் குறைந்திருக்கிறது.
குழந்தை பிறந்து ஒன்பது நாள்கள் தாயும் குழந்தையும் தனித்து வைக்கப்படுவார்கள். நாடோடி சமூகமாக இருந்தவரை தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே தனித்து பழந்துணிகளால் ஒரு குடில் கட்டி தங்க வைப்பார்கள். தற்போது குடியிருப்புகள் உருவாகியுள்ள நிலையில், சில பகுதிகளில் இதுமாதிரி சடங்குகளுக்கெனவே ஒரு குடில் கட்டிக்கொள்கிறார்கள். அல்லது தங்கள் வீட்டின் ஒரு பகுதியில் தனித்து வைக்கிறார்கள்.
பெண்கள் பூப்பெய்திய, குழந்தை பிறந்த வீடுகளில் 9 நாள்கள் எவரும் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. பத்தாம்நாள் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தி தாயையும் சேயையும் இயல்பாக வீட்டுக்குள் சேர்ப்பார்கள். பெண் பூப்புச் சடங்கையும் பிற சமூகங்களில் நடப்பதுபோல் கோலாகமாகச் செய்கிறார்கள். இந்தச் சடங்கில் வழக்கம்போல் தாய்மாமன் முக்கியத்துவம் பெறுகிறார். பெண்ணுக்கு தாய்மாமன் குடும்பமே சீர் செய்யவேண்டும். தகுந்த பிரிவில் மட்டுமே பெண் கொடுத்து, பெண் எடுக்க வேண்டும். மனைவி முழுமையாக கணவனைச் சார்ந்தே வாழ்கிறார்.
எவ்வித பொருளாதார உடமைச் சூழலும் இல்லாமல் அன்றாடங்களை நிச்சயமின்றி கழித்து வந்த இந்த மக்களிடையே அண்மைக்காலங்களில் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த தலைமுறையின் சிலர் தங்கள் வாழ்க்கை நிலை குறித்து சிந்ததித்ததன் விளைவாகவும், இயல்பாகவே, பிற சமூகத்தைப் பார்த்து பழங்குடி மக்களிடையே எழுந்துள்ள ஒருவித எழுச்சியினாலும் பெரும்பாலானோர் மாடுகளை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். குறிப்பாக இந்தத் தலைமுறை இளைஞர்கள் பிற வெகுசமூகங்களைப் போலவே உடை உடுத்தவும், செயலாற்றவும் பழகி விட்டார்கள். சிலர் இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். காலம் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருக்கிறது.!