46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது போதையிலிருந்த கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு காவல் அதிகாரியைத் தாக்கி ஒரு வாரம் கடந்தும், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், இன்னும் கைது செய்யப்படவில்லை என்றால், திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எவ்வளவு தூரம் செயலிழந்து கிடக்கிறது என்பதை உணர முடியும்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!
கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப்பொருள்கள் கடத்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள், கிட்னி திருடுபவர்கள், பாலியல் குற்றவாளிகள் என, திமுக ஆட்சி நடத்துவதே சமூக விரோதிகளுக்காகத்தான். நான்கு ஆண்டு ஆட்சியில், தமிழகத்தை ஐம்பது வருடம் பின்னோக்கிக் கொண்டு சென்றிருப்பதுதான் திமுகவின் சாதனை.
உடனடியாக, துணை ஆய்வாளர் ராஜாராமன் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத நிலையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.