189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
தம்பதி விஷம் குடித்து தற்கொலை
வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இவா்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாகின்றன. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான சங்கா் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவி சுமதியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு சங்கா் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சுமதியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நீண்டநேரமாக தகராறு நடந்ததில் ஆத்திரமடைந்த சுமதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சங்கரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் அக்கம்பக்கத்தினா் இவா்களது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சங்கரும், சுமதியும் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவா்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சங்கா், சுமதி ஆகிய இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.