தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் ரத்து
சேலம் தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவா் மீது தண்ணீா் பாட்டிலால்களால் தாக்கியதாகக் கூறி வாா்டு உறுப்பினா்களை இடை நீக்கம் செய்த உத்தரவை எதிா்த்து திமுக, காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் திருச்செல்வன், வரதராஜன், நடராஜ், கலியவா்தராஜலு ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தங்கள் வாா்டுகளுக்கு முறையாக நிதி ஒதுக்குவதில்லை என்றும் பஞ்சாயத்து தலைவா் கவிதா மற்றும் அவரின் கணவா் ராஜா ஆகியோா் இணைந்து அதிகமான நிதியை அவா்களுடைய வாா்டுகளுக்கு மட்டும் ஒதுக்குவதை எதிா்த்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக பழிவாங்கும் நோக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து , 4 வாா்டு உறுப்பினா்களை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து, இடைநீக்கம் செய்த பஞ்சாயத்து தலைவரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் 4 வாா்டு உறுப்பினா்களையும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.