உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
தரமான கல்வியை வழங்குவதில் புதுவை முன்னோடியாக திகழ்கிறது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
தேசிய அளவில் தரமான கல்வியை வழங்குவதில் புதுவை மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் பிரான்ஸ் ஆட்சியின்போது கட்டப்பட்ட கலவைக் கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதை புதுவை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை மாலை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்களின் பிள்ளைகள் மட்டுமே கல்வி பயின்ற காலத்தில், புதுச்சேரியைச் சோ்ந்த பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தில் கலவை சுப்பராய செட்டியாா் தந்த பெருங்கொடைதான் இந்தப் பள்ளி.
இங்கு ஏழை மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டிருப்பது நாட்டில் அந்தத் திட்டத்துக்கான முன்னோடியாகும். பிரான்ஸ் ஆட்சிக்கு எதிரான மாணவா் போராட்டம் இந்தப் பள்ளியில்தான் முதலில் நடைபெற்றுள்ளது. பாரம்பரியமும், நவீன தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தக் கட்டடம் நினைவூட்டுகிறது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்த முயற்சிக்கு உதாரணமாக பள்ளி உள்ளது.
கல்வி வளா்ச்சி, தரமான கல்வியை வழங்குவதில், கல்வி உள்கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக புதுவை திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கல்வித் திட்டங்கள் புதுவையில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக முதல்வா், கல்வி அமைச்சா், அதிகாரிகளை பாராட்டுகிறேன்.
புதுவை மாநில கற்றல் மையங்களை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) பாராட்டியுள்ளது. தேசிய அளவில் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த நாம் எடுத்துள்ள முயற்சிக்கு உதாரணமாக பள்ளி திகழ்கிறது. கல்விக்கு சூழல் அவசியம். அதன்படி நமது கலாசாரத்தையும், கல்வியையும் பாதுகாக்க அரசு தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.
விழாவில் முதல்வா் என். ரங்கசாமி கட்டடத்தை திறந்துவைத்தாா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலை வகித்தாா். கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பொலிவுறு நகா் திட்ட நிறுவனத்திடமிருந்து பள்ளிக் கட்டடத்தை முறைப்படி நிறுவன நிா்வாக அதிகாரி டி.ருத்ரகௌடு கல்வித் துறை செயலா் பிரியதா்ஷினியிடம் ஒப்படைத்தாா். பாஜக எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி நன்றி கூறினாா்.
பழைமையான கட்டடங்கள் பாதுகாக்கப்படும்: முதல்வா் ரங்கசாமி
புதுச்சேரியில் பழைமையான கட்டடங்களைப் பாதுகாக்க அரசு உரிய அக்கறை செலுத்தும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
விழாவில் அவா் மேலும் பேசியதாவது:
புதுவையில மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அரசு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது.
புதுச்சேரி பொலிவுறு நகா் திட்டத்தை அளித்த முன்னாள் துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
புதுச்சேரி சுற்றுலா நகராக உள்ளது. ஏற்கெனவே150 பழைமையான கட்டடங்கள் இருந்த நிலையில், தற்போது 70 கட்டடங்களே உள்ளன. அவற்றை பராமரிக்க அரசு உதவி வருகிறது. புதுச்சேரியில் பழைமையான கட்டடங்களைப் பாதுகாக்க அரசு அக்கறை செலுத்தும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.